வல்லம் ஏகெளரி அம்மன் - சிறப்புப் பார்வை
முனைவர் பிரியாகிருஷ்ணன்.
பதிவு செய்த நாள் : 25.02.2024
அமைவிடம்:
தஞ்சைக்கருகில்
வல்லம் என்ற ஊரிலிருந்து 3.5 கி மீ தொலைவில்
வல்லம் காளி கோயில் ஒன்று உள்ளது. அங்கிருந்து ஆலங்குடி செல்லும் வழியில் மூன்று கிலோமீட்டர்
தொலைவில் சாலையின் மேற்குப் பக்கத்தில் இக்கோயில் அமைந்துள்ளது
தலவரலாறு:
தலபுராணத்தில்
ஏகவீரியம்மன் சருக்கத்தில் அம்மனின் சிறப்புகள் 47 பாடல்களில் சிறப்பிக்கப்படுகின்றன.108 நாமங்களும்
சுட்டப்படுகின்றன. அம்மனுக்குரிய தேவி தீர்த்த சருக்கம் 16 விருத்தங்களைக் கொண்டுள்ளது.
தல புராணத்தில் சொல்லப்பட்டுள்ள கதைப்படி, முன்னொருக் காலத்தில் பெண்ணால் மட்டுமே தனக்கு
அழிவு உண்டாகும்படியான வரம் பெற்ற தஞ்சாசுரன் என்னும் அரக்கன் தேவர்களைத் தொடர்ந்து
துன்புறுத்தி வந்தான். இதனால் கலங்கிய தேவர்கள் சிவனிடம் தங்களைக் காக்கும்படி முறையிடுகின்றனர்.
அவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன் பார்வதியை தஞ்சாசுரனை அழிக்க அனுப்புகின்றார். தஞ்சாசுரனுடன்
பார்வதி போரிடுகிறாள். ஆனால் அவனை எளிதில் அழிக்க இயலவில்லை. அசுரனின் பல வடிவங்களை எடுக்கின்றான். அத்தனைக்கும்
பார்வதி பதிலடிக் கொடுக்கிறாள். ஒரு கட்டத்தில் எருமை வடிவம் எடுக்கிறான் அசுரன்.
அந்த எருமையினை பார்வதி தன் சூலத்தால் குத்தி
வதம் செய்கிறாள். இதனால் அவளுக்கு மேலும் உக்கிரம் அதிகமாகின்றது. பார்ப்பவர்களையெல்லாம்
துன்புறுத்த ஆரம்பிகின்றாள். அசுரனிடம் தப்பித்து அம்பிகையிடம் சிக்கிக் கொண்ட தேவர்கள்
மீண்டும் சிவனிடம் முறையிடுகின்றனர். சிவன் பார்வதியை பார்த்து, ‘ஏ கவுரி சாந்தம் கொள் ’ என்று சொல்ல
பார்வதியும் சாந்தமானாள் என்று தலபுராணம் கூறுகின்றது.
பார்வதியின்
கோபம் சற்று தணிந்தது. நெல்லிப்பள்ளம் என்ற
குளத்தில் மூழ்கி எழுந்தாள். அப்போது பக்தர்கள் பால் குடம் எடுத்து வந்து அம்மனுக்கு
அபிஷேகம் செய்து அங்கேயே எழுந்தருளவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். பக்தர்களின் வேண்டுகோளுக்கு
இணங்க இங்கு ஏகவுரி அம்மனாக வடக்கு நோக்கி அமர்ந்து அருள்புரிந்து வருகிறாள். அம்மன்
அரக்கனை வதம் செய்தது ஆடிமாத கடைசி வெள்ளிக்கிழமை ஆகும். எனவே அன்றைய தினம் பக்தர்கள்
பால்குடம் எடுத்துவந்து, தீ மிதித்து அம்மனை சாந்தப் படுத்துகின்றனர் என்று சொல்லப்படிகின்றது.
சிற்பங்கள்:
மண்டபத்தின்
முதலாம் பராந்தகன் காலத்தை சார்ந்த விநாயகர் சிற்பம் ஒன்றும், சண்டேகரர் சிற்பம் ஒன்றும்
உள்ளன. மற்றொரு சண்டேசுரரின் சிற்பம் இராஜராஜன் காலத்தியதாயிருக்கலாம். இவை தவிர இரு
உடைந்த் தலைகள் 13 14 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை. முன் மண்டபத்தில் ஒன்றும் இரண்டாம்
திருச்சுற்றில் ஒன்றுமாக இரு முருகன் சிலைகள் உள்ளன.இவை மிகவும் பிற்காலத்தச் சார்ந்தவை.
கருவறையை நெருங்கும் முன்னர் தேவிக்கு அருகில் சுப்பிரமணியர் தனி மண்டபத்தில் அருள்
பரப்புவதைக் காணலாம். அங்கேயே வாராகி, பிரத்யங்கரா, ஆதிசங்கரர், நாகர் போன்றோரின் சிலைகள்
வழிபடப்படுகின்றன. கோயிலிலேயே ஒரு தூணுக்கு முன் சூலத்தை பதித்து பூஜிக்கிறார்கள்.
விமானம் முழுதும் பெண் தெய்வங்களின் சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. இரண்டாம் திருச்சுற்றில்
காத்தான், இலாட சந்நியாசி, மதுரை வீரன், கறுப்பு ஆகிய தெய்வங்கள் சன்னதிகளும் குதிரை
மீதமர்ந்த வீரன் சிற்பமும் உள்ளன.
நாட்டுப்புறப்
பாடலில் ஏகெளரி அம்மன்:
வல்லத்து
ஏகெளரி வடக்குப்பாத்த செல்வி
நீலி
கபாகி நிரந்ததோர் பஞ்சாட்சரி
நாலு
மூல செளந்தரியே நாயகியே வாருமம்மா
என்ற
நாட்டுப்புறப் பாடலில் இவ்வம்மனைக் குறித்து பாடப்பட்டுள்ளது.
பக்தர்களின்
வேண்டுதலும் நம்பிக்கையும்:
கோவில்
கருவறையில் ஏகெளரி அம்மனைச் சுற்றியபடி இரண்டு நாகங்கள் இருப்பதை காணலாம். ராகுவும்,
கேதுவும் அம்மனின் கட்டுப்பாட்டில் இருக்கும் தலம் இது. ராகு, கேது தோஷம் நீங்கும்
தலம். இந்த தலத்திற்கு வந்து அம்மனை தரிசித்தால் நாகதோஷம், கால சர்ப்பதோஷம், களத்திரதோஷம்,
முதலான அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம். திருமணத்தடை, குழந்தை பாக்கியம் ஆகியவற்றிற்கு மிகச்சிறந்த பரிகார
தலமாக உள்ளது. திருமண தடை உள்ள பெண்கள் இங்கே வந்து அம்மனுக்கு புடவை சாத்தி, அம்மனின்
திருப்பாதத்தில் மஞ்சள் வைத்து வணங்குகின்றனர். அதில் இருந்து ஒரேயொரு மஞ்சளை எடுத்து
வந்து தினமும் குளிக்கும்போது பூசிக்கொள்ள விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.
உடல் நலமில்லாமல் இருப்பவர்கள் தாங்கள் உடல் நலம் பெற்றால் அம்மனுக்கு எருமைக்கன்றை
காணிக்கையாக செலுத்துவதாக வேண்டிக்கொள்கிறார்கள். ஏகெளரி அம்மன் கோவிலில் பிராது
கட்டும் வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. சொத்தை பறிகொடுப்பது, திருட்டு
போன்ற சம்பவங்களுக்கு அம்மனிடம் பிராது கொடுப்பதால் நியாயம் கிடைக்கிறது என்பது நம்பிக்கை.
இதுபோன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் நடந்த சம்பவங்களை கோவில் பூசாரியிடம்
ஒரு வரிவிடாமல் கூறுவார்கள். அதற்கு பூசாரி அம்மனுக்கு அர்ச்சனைகள் செய்து முறையிடுவார்.
இதைக்கேட்டு ஏகெளரி அம்மன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கச்செய்கிறாள் என்பது
ஐதீகம். இங்ஙனம் ஏகெளரி அம்மன் கோவில் ஒரு
பிரார்த்தனை தலமாகவும் விளங்குகின்றது.
No comments:
Post a Comment