தூத்துக்குடி மாவட்டம்,ஒட்டப்பிடாரம்
தாலுக்காவைச் சேர்ந்த முறம்பன் என்னும் கிராமத்தில் இருக்கும் குளத்திற்கு வடக்குப்
புறமாக அரியவகை நாயக்கர் கால நடுகல்லை பேராசிரியர் மற்றும் தொல்லியல் ஆய்வாளர் முனைவர் ப்ரியாகிருஷ்ணன், தொல்லியல் ஆர்வலர் வினோத் ஆகியோரால் கண்டுப்பிடிக்கப்பட்டது.
இதுகுறித்து தென்னகத்
தொல்லியல் வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் ப்ரியாகிருஷ்ணன் கூறியதாவது பண்டையக் காலத்தில் வீரமரணம் அடைந்த அரசர்களுக்கும் வீரர்களுக்கும்
நடுகல் எடுக்கும் வழக்கம் இருந்துவந்தது.இந்த நடுகல் கிபி 16 அல்லது கிபி 17 ஆம் நூற்றாண்டைச்
சேர்ந்தது.செவ்வியல் அழகோடு மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ள இந்த நடுகல் அரியவகையைச்
சார்ந்தது,கர்நாடகத்தில் கிடைக்கும் நடுகல்லைப் போன்று நுணுக்கமாகக் காணப்படுகிறது.நடுகல்லில்
இருக்கும் சிற்பத்தைப் பார்க்கும்போது நாயக்கர் கால சிற்பங்களை ஒத்துள்ளது.அரசனுக்கோ
அல்லது குறுநில அரசனுக்கோ எடுத்த நடுகல்லாக இருக்கலாம்.நடுகல்லின் மையப் பகுதியில்
அரசன் குதிரையின் மீது அமர்ந்துக் கொண்டு போரிடுவதுப் போலவும்,அதனை எதிர்க்கும் வீரன்
கையில் கேடயமும் வாளும் கொண்டு போரிடுவதுப் போலவும் ,போர்களத்தில் குதிரைகள் வீழ்வதுப்
போலவும் ,அதனுடனே வீரர்களும் வீழ்வதுப் போலவும் நடுகல்லின் கீழ்பகுதியில் காட்சிப்படுத்தி
இருப்பதால் போர்களத்தில் இறந்துப்பட்ட அரசனுக்கு எடுத்த நடுகல்லாக இருக்கலாம் .மேலும் நடுகல்லின் மேற்புறத்தில் வீரமரணம் எய்திய அரசனை தேவ உலகப் பெண்கள் மாலையிட்டு
தேவர் உலகிற்கு அழைத்துச் செல்வது போலவும் காட்சிப்படுத்தியிருப்பது நோக்கத்தக்கது.பொதுவாக
நாயக்கர் காலத்தில் கணவன் இறந்ததும் உடன்கட்டை ஏறும் பழக்கம் பரவலாக இருந்துவந்தது.அதனால்
அரசனின் மனைவிமார்கள் உடன்கட்டை ஏறியக் காட்சியாகக் கூட இருக்கலாம் என்று கூறினார்.இவ்வளவு
சிறப்பு வாய்ந்த நடுகல்லை இன்றும் சோலை ராஜா என்ற பெயரில் நாயக்கர் இன மக்கள்
தம் குலதெய்வமாக வணங்குகிறார்கள். வருடந்தோறும் தை மாதம் தைப்பூசம் அன்று திருவிழாவாகக்
கொண்டாடி வருகின்றனர் என்றும்,இவர்கள் அனைவரும் வெவ்வேறு ஊர்களுக்கு இடம் பெயர்ந்து
சென்றுவிட்டார்கள் என்றும் கூறினார்.
No comments:
Post a Comment