Friday, 1 December 2023

 

வெற்றிலைக்கு இத்தனைப் பெயர்களா?


வெற்றிலை மிளகு இலையிலிருந்து பரிணமித்ததாகும். மிளகு இலையிலுள்ள காரம் வெற்றிலையிலும் இருப்பதைக் காணலாம்.எனவே காரம் இல்லாத இலை என்னும் கருத்தில் வெற்றிலை என்னும் சொல் பிறந்து இருக்கிறது என்பர். இதன் பூர்வீகம் மலேசியா. வெற்றிலையைத் தமிழ்நாட்டினர் வெற்றிலை என்றும்,வெத்திலை என்றும் அழைக்கின்றனர். தெலுங்கு மொழியில் தமலபாக்கு, வக்கா ஆக்கு  என்றும் அழைக்கின்றனர்.அரேபியர் இதனைத் தம்போல்  (Tambol)என்றும் வடநாட்டினர் பான் கா பட்டா(pan-ka-patta)  என்றும்  அழைப்பர். வெற்றிலையை அடகு, அடை, சாகம், பன்னம்,  பாக்கிலை, பாசிலை, தம்பலம், திரை, திரையல், வெள்ளிலை, வெற்றிலை, வெத்திலை என்று தமிழ் இலக்கியங்கள் விரித்துக் கூறும்.. சீவக சிந்தாமணியில் வெற்றிலை பயிரிடும் தோட்டம் மெல்லிலைக்காவு (சீ.பா.826) என்று குறிப்பிடுகின்றது. வெற்றிலை வைக்கும் பெட்டி வெற்றிலைப் படலிகை என்றும், வெற்றிலைச் செப்பு என்றும் அழைக்கப்படுகிறது. அச்செப்புத்தட்டு மணிச்செப்பு என்று சிறப்பிக்கப்படுகிறது. (சீ.பா197;1-2) வெற்றிலையின் கொடிக்குத் தாம்பூலி, தாம்பூலவலி, நாகவலி ,மூலவல்லி இலைக்கொடி என்று பல பெயர்கள் தரப்பட்டுள்ளன. இவற்றில் பல இனங்கள் உள்ளன. ரக்கொடி, கல்லாஸ்கொடி, கம்மாறு வெற்றிலைக்கொடி, சித்துக்கொடி, ஜல்லிக்காம்பு எனப்படும். கற்பூரக்கொடி ,கல்லாஸ் கொடி, வட்டக்கொடி, சித்துக்கொடி என்று பலவகைகள் இருந்தாலும்  அண்மைக் காலமாக பச்சை வெற்றிலை, வெள்ளை வெற்றிலை, கற்பூரவள்ளி ஆகியவை மட்டுமே அனைவராலும் அறியப்படக்கூடியவையாக  இருக்கின்றன. கருகருவென கரும்பச்சை நிறத்தில் இருக்கும் வெற்றிலைகள் ஆண் வெற்றிலைகள் என்றும், இளம்பச்சை வெற்றிலைகள் பெண் வெற்றிலைகள் என்றும் வகைப்படுத்தப்படுகின்றனதமிழ் நிகண்டு வெற்றிலையைத் தாம்பூலம்,  திரையல் நாகவல்லி, மெல்லிரை, மெல்லிலை என்று பல பெயர்களைச் சுட்டுகிறது.

சூடாமணி நிகண்டு,

நறிய தாம்பூல வல்லிதாம்பூலி நாகவல்லி

செறிதருமிலைக் கொடிப்பேர் திரையன் மெல்லிலையுமாரும்

ஆசிரிய நிகண்டு,

குலவு,தாம்பூல மெல்லிரை திரையல்

மூன்றும் குறிக்கிடும் வெற்றிலைப் பேர்

இசைந்த தாம்பூலி,தம்பூலவலினாகவலி

யென்பதவ் விலைக் கொடிப்பேர்

என்ற அடிகளால் அறியலாம்.

வெற்றிலை பயிராகும் பகுதிக்கு கொடிக்கால் என்று பெயர். பண்படுத்திய நிலத்தில் சிறு சிறு வாய்க்கால்களை வெட்டி கரையில் அகத்திச் செடியை வரிசையாக ஊன்றி வைப்பார்கள்.  இவற்றுடன் கலியாணமுருங்கை, கமுக, நுணா ஆகிய மரங்களை நடுதலும் உண்டு, கத்தி முளைத்த் நிலத்தை அகத்திக்கால் என்ற பெயரால் அழைப்பர். புராட்டாசி மாதத்தில் வெற்றிலைக் கொடி நடுவர். இவ்வாறு மூன்று மாதங்களில் வெற்றிலைக்கு முன் அகத்தி வளரும்போது தோட்டத்தை சடைக்கால் என்ற பெயரால் குறிப்பர். வெற்றிலை நட்டு 6 மாதம் வரை இந்நிலம் இளங்கால் என்று அழைக்கப்படும். வளர்ந்த வெற்றிலைக் கொடியை அகத்திக் காலில் கட்டுவர். கோரையை கிழித்து அகத்திச் செடியில் எடுத்துக்கட்டும் முறைக்கு எடுத்தாக்கை (எடுத்துக்கட்டுதல்) என்று பெயர். தை மாதத்தில் வளர்ந்த வெற்றிலை கொடியை நீண்ட அகத்தி மரத்தின் மேல் தென்னம்பாளையைக் கொண்டு கட்டுவதற்கு கங்குவாடு என்று பெயர். பிறகு வளர்ந்த இரண்டு அகத்தி மரங்களின் முனைகளை சேர்த்து கட்டுவதற்கு பிடிக்கட்டு என்று பெயர்.  நீண்ட வளர்ந்து செல்லும் வெற்றிலைக் கொடியை மடக்கிக் கட்டுவதற்கு மடக்கு வேலை என்று பெயர். இவ்வாறு கொடிக்கால் போட்டு மூன்று மாதங்களில் சடைக்கல் என்றும் ஆறுமாதம் ஆனதும் இளங்கால் என்றும் ஒன்றரை வருடம் ஆனட்பிறகு பயிர்க்கால் என்றும் வெற்றிலை அழியப்போகும் போது முதிக்கால் என்றும் அழிந்த கொடிக்காலுக்கு வெட்டுக்கட்டே என்றும் அழைப்பது வழக்கம். இவ்வாறு கொடிக்கால் முதிகாலாகி அழிய 3 வருடங்களாகும். இதனை விளக்கும் நாட்டுப்புற வெற்றிலைக்கும்மிப் பாடல் ஒன்று பின்வருமாறு

வெற்றிலையே வெற்றிலையே

வெண் கொடிக்கால் வெற்றிலையே -நீ

வேகமாய் வளர்ந்த கதை

விபரமாய் சொல்லவேணும்

நான் வளர்ந்த சேதியைத்தான்

நாட்டார் அறியாரோ

களிமண்ணில் காலூன்றி

கொடிக்காலில் குடிவந்தேன்

சரியான தொண்ணூறுக்கு

சடைக்காலும் நானானேன்

இருமூன்று மாசங்களில்

இளங்காலும் நானானேன்

பதினெட்டு மாசங்களில்

பயிர்க்காலும் நானானேன்

மூப்புவந்து எய்தியக்கால்

முதிக்காலும் நானானேன்

விதுமுடித்த் வேளைதனில்

வெட்டுக்கட்டே நானானேன்

விருந்துக்கும் மருந்துக்கும்  விருந்தாக நானானேன்

என்று விவரிக்கின்றது.

அக்காலத்தில் வெற்றிலை பயிரிடுவதற்கும் விற்பனை செய்வதற்கும் வரிகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. வெற்றிலை பயிரிடுவதற்கு விதிக்கப்பட்ட வரி இலைக்கூலம் என்றும், வெற்றிலையை விற்பனை செய்வதற்கு விதிக்கப்பட்ட வரி இலைவாணிபப் பாட்டம் என்றும் அழைக்கப்பட்டது. தற்போதைய ஆராய்ச்சியில், வெற்றிலையில் மிகவும் வீரியமிக்க நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட சவிக்கால் (Chavicol) என்னும் பொருள் இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளன.

முனைவர் பிரியாகிருஷ்ணன்

No comments:

Post a Comment

  வல்லம் ஏகெளரி அம்மன் - சிறப்புப் பார்வை முனைவர் பிரியாகிருஷ்ணன். பதிவு செய்த நாள் : 25.02.2024 அமைவிடம்: தஞ்சைக்கருகில் வல்லம் என்ற ஊரில...