Sunday, 24 December 2023

 

பழந்தமிழரின் வேர்களை

மயில் - மயிலார் - மயிலாறு – பூச பாவாடை – பெண்களின் விரதம்

 


https://www.youtube.com/watch?v=JKiZyUBI1bE

வெற்றிலைக்கு இத்தனைப் பெயர்களா?

 



பழந்தமிழரின் வேர்களை தேடும் விழுதாய்….. நான் முன்னெடுக்கும் தொன்மை அறிவோம் : தமிழரின் பண்பாட்டுப் பதிவுகள் முதுமுனைவர் பிரியாகிருஷ்ணன். நமது வரலாற்றை அனைத்து மக்களும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற உயர்வான எண்ணத்தில் - தொன்மை அறிவோம் : தமிழரின் பண்பாட்டுப் பதிவுகள் - என்ற தலைப்பில் தக்க அறிஞர்களின் நூல்கள் வாயிலாக அறிந்த அரிய செய்திகள், எனது தொல்லியல் சார்ந்த கள ஆய்வுகளின் வாயிலாக நான் பதிவு செய்தவை மற்றும் அறிந்தவை, இணையவழி கிடைத்த சில தரவுகள் என எல்லாவற்றையும் இணைத்து ஆய்வு செய்தும், சிலவற்றை அதில் உள்ளவாறும் இங்குப் பதிவு செய்திருக்கிறேன்.தொடர்ந்து தமிழ்ப்பணி ஆற்றிவரும் என்னை அறிந்த தமிழ் சான்றோர்கள், தொல்லியல் அறிஞர்கள், வரலாற்றுப் பேராசிரியர்கள் அனைவருக்கும் எனது அன்பும் வணக்கமும் உரித்தாகுக. இந்த செய்திகளை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் subscribe செய்து அனைவருக்கும் பகிர்ந்து ஊக்கமூட்டும் நல்ல commentகளை பதிவு செய்து எனது தமிழ்ப்பணியில் உங்களது அனைவரின் பங்களிப்பையும் தந்து உதவும்படி பணிவுடன் கேட்டு கொள்கிறேன். நன்றியும் பேரன்பும் உரித்தாகுக முதுமுனைவர் பிரியாகிருஷ்ணன்.



https://www.youtube.com/watch?v=RcpYHrykWno  

ஆண்டாள் அருளிய திருப்பாவை

ஆண்டாள் திருவடி சரணம்




 பன்னு திருப் பாவைப் பல் பதியம்! – இன்னிசையால்

பாடிக் கொடுத்தாள் நற் பாமாலை, பூமாலை

சூடிக் கொடுத்தாளைச் சொல்லு!

சூடிக் கொடுத்த சுடர்க் கொடியே, தொல்பாவை

பாடி அருள வல்ல பல் வளையாய் – நாடி நீ

வேங்கடவற்கு என்னை விதி என்ற இம் மாற்றம்

நாங் கடவா வண்ணமே நல்கு!




மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்!

நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!

சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!

கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்

ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்

கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல்முகத்தான்

நாராயணனே நமக்கே பறை தருவான்

பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்     1


வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்

செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்

பையத் துயின்ற பரமனடி பாடி

நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி

மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்

செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்

ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி

உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.   2



ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி

நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து

ஓங்கு பெறும்செந் நெல்ஊடு கயலுகளப்

பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி

வாங்க* குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்

நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.     3






ஆழிமழைக் கண்ணா ஒன்று நீகை கரவேல்

ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி

ஊழி முதல்வன் உருவம் போல்மெய் கறுத்துப்

பாழியந் தோளுடைப் பற்பனாபன் கையில்

ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து

தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்

வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்

மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.  4


மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்

தூய பெருநீர் யமுனைத் துறைவனை

ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்

தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்

தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித் தொழுது

வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்

போய பிழையும் புகுதருவான் நின்றனவும்

தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.   5




புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயில்

வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?

பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு

கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி

வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை

உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்

மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்

உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.   6




கீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத்தான் கலந்து

பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!

காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து

வாசநறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால்

ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ?

நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி

கேசவனைப் பாடவும் நீகேட்டே கிடத்தியோ?

தேச முடையாய்! திறவேலோர் எம்பாவாய்.   7



கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு

மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்

வான் போகின்றாரைப் போகாமல்காத்து உன்னைக்

கூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய

பாவாய்! எழுந்திராய் பாடிப் பறை கொண்டு

மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய

தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்

ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாயாய்.   8




தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்

தூபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்

மாமான் மகளே! மணிக் கதவம் தாழ்திறவாய்

மாமீர்! அவளை எழுப்பீரோ?* உன்மகள்தான்

ஊமையோ? அன்றி செவிடோ? அனந்தலோ?

ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?

மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று

நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்    9



நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!

மாற்றமும் தாராரோ? வாசல் திறவாதார்

நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்

போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டுஒருநாள்

கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும்

தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?

ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!

தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.    10




கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து

செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்

குற்றம் ஒன்றில்லாத கோவலர்த்தம் பொற்கொடியே!

புற்றுஅரவு அல்குல் புனமயிலே! போதராய்

சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின்

முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர்பாட

சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி! நீ

எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.     11



கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி

நினைத்து முலை வழியே நின்று பால்சோர

நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்

பனித்தலை வீழநின் வாசற்கடை பற்றிச்

சினத்தினால் தென்இலங்கைக் கோமானைச் செற்ற

மனத்துக்கு இனியானைப் பாடவும்நீ வாய் திறவாய்

இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர்உறக்கம்!

அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.    12



புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்

கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்

பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்

வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று

புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!

குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே

பள்ளிக் கிடத்தியோ? பாவாய்!நீ நன் நாளால்

கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.    13




உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்

செங்கழுனீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்

செங்கற் பொடிக் கூரை வெண்பல் தவத்தவர்

தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்

எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்

நங்காய்! எழுந்திராய் நாணாதாய்! நாவுடையாய்!

சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்

பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.   14



எல்லே! இளம்கிளியே இன்னம் உறங்குதியோ?

சில்என்று அழையேன்மின் நங்கைமீர்! போதர்கின்றேன்

வல்லைஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாய்அறிதும்

வல்லீர்கள் நீங்களே நானே தான்ஆயிடுக

ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை

எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்

வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க

வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.   15



நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய

கோயில் காப்பானே! கொடி தோன்றும் தோரண

வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்

ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறை

மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்

தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவான்

வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா! நீ

நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்.   16




அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்

எம்பெருமான்! நந்தகோபாலா! எழுந்திராய்!

கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குல விளக்கே!

எம்பெருமாட்டி யசோதாய்! அறிவுறாய்

அம்பரம் ஊடறுத்து ஓங்கி உளகளந்த

உம்பர் கோமானே! உறங்காது எழுந்திராய்

செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!

உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்.   17



உந்துமத களிற்றன் ஓடாத தோள்வலியன்

நந்த கோபாலன் மருமகளே! நப்பின்னாய்!

கந்தம் கமழும் குழலி! கடைதிறவாய்

வந்துஎங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்

பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்

பந்தார் விரலி!உன் மைத்துனன் பேர்பாடச்

செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப

வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.  18



குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல்

மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்

கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல்

வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்

மைத்தடங் கண்ணினாய்! நீஉன் மணாளனை

எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்

எத்தனை யேலும் பிரிவாற்றற் கில்லாயால்

தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்.    19

 


முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று

கப்பம் தவிர்க்கும் கலையே! துயிலெழாய்

செப்பம் உடையாய் திறலுடையாய் செற்றார்க்கு

வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்

செப்பென்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்

நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்

உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை

இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்    20




ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப

மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்

ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்

ஊற்றம் உடையாய்! பெரியாய்! உலகினில்

தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்

மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன்வாசற்கண்

ஆற்றாது வந்துஉன் அடிபணியுமா போலே

போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்.   21



அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான

பங்கமாய் வந்துநின் பள்ளிக் கட்டிற்கீழே

சங்கம் இருப்பார்போல் வந்து தலைப் பெய்தோம்

கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே

செங்கண் சிறுச் சிறிலே எம்மேல் விழியாவோ?

திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்

அங்கண் இரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்

எங்கள்மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்     22




மாரி முலைமுழஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்

சீரிய சிங்கம் அறிவுற்று தீவிழித்து

வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி

மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்

போதருமாப் போலேநீ பூவைப் பூவண்ணா! உன்

கோயில்நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய

சீரியசிங்கா சனத்திருந்த யாம் வந்த

காரியம் ஆராய்ந் தருளேலோ ரெம்பாவாய்   23



அன்றிவ்வுலகமளந்தாய்! அடிபோற்றி

சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல் போற்றி

பொன்றச்சகடமுடைத்தாய்! புகழ் போற்றி

கன்று குணிலாவெறிந்தாய்! கழல் போற்றி

குன்று குடையாவெடுத்தாய்! குணம் போற்றி

வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி

என்றென்று உன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்

இன்றுயாம் வந்தோம்; இரங்கேலோர் எம்பாவாய்   24



ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்

ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்

தரிக்க்ல னாகித் தான் தீங்கு நினைத்த

கருத்தைப் பிழைப்பித்த கஞ்சன் வயிற்றில்

நெருப்பென நின்ற நெடுமாலே! உன்னை

அருத்தித்து வந்தோம் பறைதருதியாகில்

திருத்தக்க செல்வமும் சேவகமும்யாம் பாடி

வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்   25



மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்

மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்

ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன

பாலன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே

போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே

சாலப்பெரும் பறையே பல்லாண்டிசைப்பாரே

கோல விளக்கே கொடியே விதானமே

ஆலினிலையாய்! அருளேலோர் எம்பாவாய்.    26




கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா! உன்தன்னைப்

பாடிப்பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்

நாடுபுகழும் பரிசினால் நன்றாக

சூடகமே தோள் வளையே தோடேசெவிப் பூவே

பாடகமே யென்றனைய பல்கலனும் யாமணிவோம்

ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறு

மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்

கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.    27




கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்

அறிவொன்று மில்லாத ஆய்குலத்து உன்தன்னை

பிறவிப் பெருந்துணை புண்ணியம் யாமுடையோம்;

குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்தன்னோடு

உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது

அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்

சிறுபே ரழைத்தனவும் சீறியருளாதே;

இறைவா! நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்.  28



சிற்றஞ் சிறுகாலே வந்துன்னை சேவித்துஉன்

பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்

பெற்றம்மேய்த் துண்ணும் குலத்தில் பிறந்து நீ

குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது

இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு

உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்

மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்    29




வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை

திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி

அங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவை

பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன

சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே

இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத் தோள்

செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்

எங்கும் திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பாவாய்    30


கோதை பிறந்தவூர் கோவிந்தன் வாழுமூர்

சோதி மணிமாடந் தோன்றுமூர் – நீதியால்

நல்லபத்தர் வாழுமூர் நான்மறைகளோதுமூர்

வில்லிபுத்தூர் வேதக் கோனூர்.

பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்

வேதமனைத்திற்கும் வித்தாகும் கோதை தமிழ்

ஐயைந்துமைந்தும் அறியாத மானிடரை

வையம் சுமப்பது வம்பு




திருவாடிப் பூரத்தில் செகத்துதித்தாள் வாழியே

திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே

பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே

பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே

ஒரு நூற்று நாற்பத்துமூன்றுரைத்தால் வாழியே

உயர் அரங்கற்கே கண்ணி யுகந்தளித்தாள் வாழியே

மருவாரும் திருமல்லிவள நாடி வாழியே

வண்புதுவை நகர் கோதை மலர்ப்பதங்கள் வாழியே





Friday, 1 December 2023

 

வெற்றிலைக்கு இத்தனைப் பெயர்களா?


வெற்றிலை மிளகு இலையிலிருந்து பரிணமித்ததாகும். மிளகு இலையிலுள்ள காரம் வெற்றிலையிலும் இருப்பதைக் காணலாம்.எனவே காரம் இல்லாத இலை என்னும் கருத்தில் வெற்றிலை என்னும் சொல் பிறந்து இருக்கிறது என்பர். இதன் பூர்வீகம் மலேசியா. வெற்றிலையைத் தமிழ்நாட்டினர் வெற்றிலை என்றும்,வெத்திலை என்றும் அழைக்கின்றனர். தெலுங்கு மொழியில் தமலபாக்கு, வக்கா ஆக்கு  என்றும் அழைக்கின்றனர்.அரேபியர் இதனைத் தம்போல்  (Tambol)என்றும் வடநாட்டினர் பான் கா பட்டா(pan-ka-patta)  என்றும்  அழைப்பர். வெற்றிலையை அடகு, அடை, சாகம், பன்னம்,  பாக்கிலை, பாசிலை, தம்பலம், திரை, திரையல், வெள்ளிலை, வெற்றிலை, வெத்திலை என்று தமிழ் இலக்கியங்கள் விரித்துக் கூறும்.. சீவக சிந்தாமணியில் வெற்றிலை பயிரிடும் தோட்டம் மெல்லிலைக்காவு (சீ.பா.826) என்று குறிப்பிடுகின்றது. வெற்றிலை வைக்கும் பெட்டி வெற்றிலைப் படலிகை என்றும், வெற்றிலைச் செப்பு என்றும் அழைக்கப்படுகிறது. அச்செப்புத்தட்டு மணிச்செப்பு என்று சிறப்பிக்கப்படுகிறது. (சீ.பா197;1-2) வெற்றிலையின் கொடிக்குத் தாம்பூலி, தாம்பூலவலி, நாகவலி ,மூலவல்லி இலைக்கொடி என்று பல பெயர்கள் தரப்பட்டுள்ளன. இவற்றில் பல இனங்கள் உள்ளன. ரக்கொடி, கல்லாஸ்கொடி, கம்மாறு வெற்றிலைக்கொடி, சித்துக்கொடி, ஜல்லிக்காம்பு எனப்படும். கற்பூரக்கொடி ,கல்லாஸ் கொடி, வட்டக்கொடி, சித்துக்கொடி என்று பலவகைகள் இருந்தாலும்  அண்மைக் காலமாக பச்சை வெற்றிலை, வெள்ளை வெற்றிலை, கற்பூரவள்ளி ஆகியவை மட்டுமே அனைவராலும் அறியப்படக்கூடியவையாக  இருக்கின்றன. கருகருவென கரும்பச்சை நிறத்தில் இருக்கும் வெற்றிலைகள் ஆண் வெற்றிலைகள் என்றும், இளம்பச்சை வெற்றிலைகள் பெண் வெற்றிலைகள் என்றும் வகைப்படுத்தப்படுகின்றனதமிழ் நிகண்டு வெற்றிலையைத் தாம்பூலம்,  திரையல் நாகவல்லி, மெல்லிரை, மெல்லிலை என்று பல பெயர்களைச் சுட்டுகிறது.

சூடாமணி நிகண்டு,

நறிய தாம்பூல வல்லிதாம்பூலி நாகவல்லி

செறிதருமிலைக் கொடிப்பேர் திரையன் மெல்லிலையுமாரும்

ஆசிரிய நிகண்டு,

குலவு,தாம்பூல மெல்லிரை திரையல்

மூன்றும் குறிக்கிடும் வெற்றிலைப் பேர்

இசைந்த தாம்பூலி,தம்பூலவலினாகவலி

யென்பதவ் விலைக் கொடிப்பேர்

என்ற அடிகளால் அறியலாம்.

வெற்றிலை பயிராகும் பகுதிக்கு கொடிக்கால் என்று பெயர். பண்படுத்திய நிலத்தில் சிறு சிறு வாய்க்கால்களை வெட்டி கரையில் அகத்திச் செடியை வரிசையாக ஊன்றி வைப்பார்கள்.  இவற்றுடன் கலியாணமுருங்கை, கமுக, நுணா ஆகிய மரங்களை நடுதலும் உண்டு, கத்தி முளைத்த் நிலத்தை அகத்திக்கால் என்ற பெயரால் அழைப்பர். புராட்டாசி மாதத்தில் வெற்றிலைக் கொடி நடுவர். இவ்வாறு மூன்று மாதங்களில் வெற்றிலைக்கு முன் அகத்தி வளரும்போது தோட்டத்தை சடைக்கால் என்ற பெயரால் குறிப்பர். வெற்றிலை நட்டு 6 மாதம் வரை இந்நிலம் இளங்கால் என்று அழைக்கப்படும். வளர்ந்த வெற்றிலைக் கொடியை அகத்திக் காலில் கட்டுவர். கோரையை கிழித்து அகத்திச் செடியில் எடுத்துக்கட்டும் முறைக்கு எடுத்தாக்கை (எடுத்துக்கட்டுதல்) என்று பெயர். தை மாதத்தில் வளர்ந்த வெற்றிலை கொடியை நீண்ட அகத்தி மரத்தின் மேல் தென்னம்பாளையைக் கொண்டு கட்டுவதற்கு கங்குவாடு என்று பெயர். பிறகு வளர்ந்த இரண்டு அகத்தி மரங்களின் முனைகளை சேர்த்து கட்டுவதற்கு பிடிக்கட்டு என்று பெயர்.  நீண்ட வளர்ந்து செல்லும் வெற்றிலைக் கொடியை மடக்கிக் கட்டுவதற்கு மடக்கு வேலை என்று பெயர். இவ்வாறு கொடிக்கால் போட்டு மூன்று மாதங்களில் சடைக்கல் என்றும் ஆறுமாதம் ஆனதும் இளங்கால் என்றும் ஒன்றரை வருடம் ஆனட்பிறகு பயிர்க்கால் என்றும் வெற்றிலை அழியப்போகும் போது முதிக்கால் என்றும் அழிந்த கொடிக்காலுக்கு வெட்டுக்கட்டே என்றும் அழைப்பது வழக்கம். இவ்வாறு கொடிக்கால் முதிகாலாகி அழிய 3 வருடங்களாகும். இதனை விளக்கும் நாட்டுப்புற வெற்றிலைக்கும்மிப் பாடல் ஒன்று பின்வருமாறு

வெற்றிலையே வெற்றிலையே

வெண் கொடிக்கால் வெற்றிலையே -நீ

வேகமாய் வளர்ந்த கதை

விபரமாய் சொல்லவேணும்

நான் வளர்ந்த சேதியைத்தான்

நாட்டார் அறியாரோ

களிமண்ணில் காலூன்றி

கொடிக்காலில் குடிவந்தேன்

சரியான தொண்ணூறுக்கு

சடைக்காலும் நானானேன்

இருமூன்று மாசங்களில்

இளங்காலும் நானானேன்

பதினெட்டு மாசங்களில்

பயிர்க்காலும் நானானேன்

மூப்புவந்து எய்தியக்கால்

முதிக்காலும் நானானேன்

விதுமுடித்த் வேளைதனில்

வெட்டுக்கட்டே நானானேன்

விருந்துக்கும் மருந்துக்கும்  விருந்தாக நானானேன்

என்று விவரிக்கின்றது.

அக்காலத்தில் வெற்றிலை பயிரிடுவதற்கும் விற்பனை செய்வதற்கும் வரிகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. வெற்றிலை பயிரிடுவதற்கு விதிக்கப்பட்ட வரி இலைக்கூலம் என்றும், வெற்றிலையை விற்பனை செய்வதற்கு விதிக்கப்பட்ட வரி இலைவாணிபப் பாட்டம் என்றும் அழைக்கப்பட்டது. தற்போதைய ஆராய்ச்சியில், வெற்றிலையில் மிகவும் வீரியமிக்க நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட சவிக்கால் (Chavicol) என்னும் பொருள் இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளன.

முனைவர் பிரியாகிருஷ்ணன்

  வல்லம் ஏகெளரி அம்மன் - சிறப்புப் பார்வை முனைவர் பிரியாகிருஷ்ணன். பதிவு செய்த நாள் : 25.02.2024 அமைவிடம்: தஞ்சைக்கருகில் வல்லம் என்ற ஊரில...