Monday, 10 February 2020


தமிழக ஆளுமைகள்-1
இன்றைய காலகட்டத்தில் தமிழக ஆளுமைகளை நினைவுகூற வேண்டியது அவசியமானதாகும்.ஏனெனில் அடுத்த தலைமுறையினருக்கு தமிழகத்தின் அரும்பெரும் ஆளுமைகளை கொண்டு செல்ல வேண்டியது நமது கடமையாகும்.அவ்வகையில் இங்கு சில ஆளுமைகளை தொடர்ந்து பதிவிட இருக்கிறேன்.

கலைகளின் சரணாலமாக விளங்கிய ஓவியர் தனபால் - ஓர் பார்வை 

கட்டுரையாளர் :முனைவர் பிரியா கிருஷ்ணன்

                             
தொல்பழங்காலத்திலிருந்து இன்று வரை தொடர்ந்து, பல மாற்றங்களையும் பரிணாமங்களையும் தன்னகத்தே கொண்ட கலைகளில் முதன்மையானதும் முக்கியமானதும் ஓவியக்கலையாகும். தற்காலத்தில் உள்ள நவீனங்களையும், கால மாற்றத்துனூடே வரும் புதிய கண்டுபிடிப்புகளையும் உள்வாங்கி தன் பழைமையினை இழக்காது உயிர்ப்போடு வாழும் ஒரு கலை ஓவியக்கலை. சிறு கோடுகள் கீறல்களாக மாறி உருவங்களைத் தந்து அதனுள் வண்ணங்களைத் தீட்டி பாறைகளிலும், சுவர்களிலும் எண்ணங்களின் வெளிப்பாடாய் குடியேறியது. அடுத்த நிலையில் ஓவியங்கள் சிற்பங்களாக பரிணாமம் கொண்டு அவற்றிற்கு உயிர்ப்பாய் ஆடல், பாடல், கூத்து என வளர்ச்சி எய்தியது. ஒவ்வொன்றும் வெவ்வேறு தனித்துவத்தை அடைந்ததை யாராலும் மறக்க இயலாது. ஒவ்வொன்றும் ஒன்றோடு ஒன்றாய் பின்னிப் பிணைந்தது. ரசிகனின் கலை ஆர்வம் மட்டும், வெவ்வேறு ரசனைகளின் பிறப்பிடமாய் மாற அவனின் ரசனைக்கு விருந்தாய் அமைந்த படைப்பாளிகள் வெகு சிலரே. அவர்களுள் என்றும் நம் நினைவில் நின்று, தென்னகத்தின் நவீன ஓவிய சிற்ப இயக்கத்தின் முன்னோடியாக வாழ்ந்து காட்டி நமக்கு வழிகாட்டியாக, மறைந்தும் உயிர்ப்பை நம்முள் விதைப்பவர் ஓவியர் தனபால் என்றால் மிகையல்ல.
      பல்லவர்கால ,சோழர்கால சிற்பங்கள் தொட்டு வெளிநாட்டுச் சிற்பிகளான ரூதீன், ஹென்றி மூர் வரை பல்வேறு சிற்ப வெளிபாடுகளை தனது சிற்பங்களில் உலகிற்கு காண்பித்தவர். இவரது சிற்பத்தில் உள்ள கோடுகள்தான் சிற்பத்தின் இசை லயமான இலகுவும் உணர்ச்சிகளை மெலிதாக காட்டியும் உயிர்ப்போடும் இருந்தன; அவை மரபு, நவீனத்துவம் என்ற பிரிவுகளை எல்லாம் எளிதாக கடத்தி செல்பவை. இவரது சிற்பங்கள் தமிழின் அழகியல் கூறுகளை சுமந்து திரியும் அதிசய படைப்புகள். சிலுவை சுமக்கும் இயேசு முதல் அவ்வையார் வரை பார்த்து பார்த்து ரசிக்க இரு கண்கள் போதாது. தமிழ் சிற்ப மரபை ஒட்டி அருமையான சிற்பங்கள் இவரது படைப்புகளில் வெளிவந்தன.
    ஓவியர் தனபால் தொடக்கக் காலத்தில் வண்ண ஓவியங்களிலும் கோட்டுச் சித்திரங்களிலும் மேற்கத்திய நவீன சாயலுடன் தென்னிந்திய புராதன கிராமிய ஓவிய சிற்பங்களின் அழகியலைப் படைத்தார். அவருக்கென்று தனியாக ஒரு பாணி இருந்தது. அதன் மூலம் அவருடைய ஓவியங்கள் பிரபலம் அடைந்தன. பிற்காலத்தில் அவரது சிறந்த சிற்பங்கள் மூலமும் தேசிய அளவில் அவருடைய புகழ் பரவியது. 1962 இல் சிறந்த சிற்பத்திற்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. 1980 இல் தில்லி லலித் கலா அகாதெமி தனபாலுக்கு 'பெல்லோ ஆப் தி அகாதெமி' என்னும் விருதை வழங்கியது. அவரது புகழ்பெற்ற சிற்பங்கள் ஓவியங்கள் பலவும் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள அருங்காட்சியகங்களில் இடம்பெற்றுள்ளன. அதேபோல் அவரால் உருவாக்கப்பட்ட பல தேசியத் தலைவர்கள், கலைஞர்கள், இலக்கிய மேதைகள் ஆகியோரின் உருவச் சிற்பங்கள் புகழ் பெற்றவை ஆகும். 1950-60 களில் செருமனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் ஓவியக் கண்காட்சிகளை நடத்தினார். தனபாலின் ஓவியங்களும் சிற்பங்களும் சென்னைத் தேசிய கலைக்கூடம், புது தில்லி நவீனக் கலை தேசிய காலரி, புதுதில்லி பாராளுமன்றம் ஆகிய இடங்களில் இடம்பெற்றுள்ளன. .2007ஆம் ஆண்டில் அவருடைய சிறந்த 52 ஓவியங்கள் இலண்டனில் உள்ள நோபிள் சேஜ் ஆர்ட் காலரியால் கௌவுரவிக்கப்பட்டது. இத்தகைய சிறப்பு வாய்ந்த கலைமகளின் செல்லக் குழந்தை, நமது ஓவியர், சிற்பி தனபால். அவரது கலைவாழ்க்கையினைப் பற்றி இக்கட்டுரை ஆராய்கிறது
        ஒவியர் தனபால் அவர்கள் 3.3.1919-ஆம் ஆண்டு சென்னை மயிலாப்பூரில் பிறந்தார். இவர் தனது பிறந்தநாள் ஒரே எண்களில் இருப்பதே எனக்கு பெருமையாக உள்ளது என்று மற்றவர்களிடம் அடிக்கடி  சொல்வதுண்டாம். சிறு வயது முதலே சின்னச் சின்ன நிகழ்வுகளையும் கூட கூர்ந்து நோக்கும் ஆற்றல் பெற்றவர். இளம் வயதிலேயே ஓவியம் வரைவதில் அதீத ஆர்வம் கொண்டவராக இருந்தார். ஒரு மாணவன் எதிர்காலத்தில் இந்த துறையில் பிரகாசிப்பான் என்று ஒர் ஆசிரியரால் மட்டுமே எளிதில் யூகிக்க முடியும். அவ்வாறே ஓவியர் தனபாலின் கலை ஆர்வத்தினை முதலில் உணர்ந்த தமிழாசிருயரும் பிரபல தமிழறிஞருமான சீனி வேங்கடசாமி, ’நீ ஓவியக் கல்லூரியில் சேர்ந்து கற்றுக் கொள், உனக்கு ஓவியம் நன்றாக வருகிறது’ என்று அறிவுரை கூறியுள்ளார். அதனால் ஓவியக்கலையினை முறைப்படி கற்றுக்கொள்ளும் வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருந்தார். இதனிடையில் தன் பள்ளி நண்பனின் வீட்டிற்கு அடிக்கடி சென்று நண்பனின் தந்தையாரிடம் மரப்பொம்மை செய்வதை கற்றுக் கொணடார். மரத்திலான பீர்க்கன்க்காய் பொம்மைதான் அவர் செய்த முதல் கலைவெளிப்பாடாம். இவ்வகையில் அவரது ஆர்வம் மேலும் மேலும் வளர்வதை அறிந்த அவரின் அக்கா கணவர் ஒரு நாள் அவரை அழைத்துக் கொண்டு போய் ஒரு போட்டோ ஸ்டியோவில் (ரத்னா அண்ட் கோ போட்டோ) சேர்த்துவிட, அது அவருக்கு ஒரு பணியிடமாகவே தோன்றியது. அதனால் ஒன்று, இரண்டு, மூன்று என அடுத்தடுத்த ஸ்டுடியோக்கள் மாற மூன்றாவதாக சேர்ந்த ஸ்டுடியோ முதலாளிக்கு ஓவியம் வரையத் தெரிந்திருந்த காரணத்தால் அவருடன் இணைந்து பணியாற்றுவதில் விருப்பம் கொண்டார். தொடர்ந்து முயற்சி செய்ததில் வெற்றிகரமாக கோவிந்த ராஜு நாயக்கரிடம் ஓவியம் கற்றுக் கொள்ள வாய்ப்பும் கிட்டியது. அதன்பின் சென்னை ஓவியக் கல்லூரியில் சேர்ந்து ஓவியப் பயிற்சி பெற்றார்.
  ஓவியக் கல்லூரியில் முதல்வர் ராய் சவுத்ரியிடம் ஓவியம் மட்டுமல்லாது சிற்பக்கலையினையும் கற்றுத் தேர்ந்தார் ஓவியர் தனபால். ஓவியம், சிற்பம் மட்டுமல்ல நடனத்திலும் இசையிலும் ஆர்வம் இருந்ததால் காட்டுமன்னார் கோவில் முத்துக்குமாரசுவாமி நட்டுவனாரிடம் முறைப்படி நடனத்தை கற்றார். அடுத்தக் கட்ட நிகழ்வாக அன்று நாட்டியத்தில் பிரபலமாக இருந்த நடராஜன் -சகுந்தலா தம்பதியினருடன் இணைந்து பெரியாழ்வார், புத்தா போன்ற நாட்டிய நாடகங்களை நடித்து பெயர் பெற்றார். அந்த நாடகங்களில் பயன்படுத்தப்படும் அணிகலன்கள் மற்றும் உடைகள் ஆகியவற்றை வடிவமைத்து தயாரிப்பதும் தானே செய்வதாக கூறி அதிலும் தனது ஈடுபாட்டினைக் காட்டினார். அதனால் ஓவியர் தனபாலை நாடகத்தில் அறிமுகப்படுத்தும்போது சித்திரம் தனபால் என்றே அறிமுகப் படுத்துவார்களாம். அவரது ஆர்வம் பரத நாட்டியத்தோடு நின்று விடவில்லை. அதன் தொடர்ச்சியாக கதகளி குமாரிடம் கதகளியும், போலேநாத்திடம் கதக்கும் கற்றுத் தேர்ந்தார். திரைப்படத்திலும் ஓவியர் தனபால் தனது முத்திரையை பதித்துள்ளார் என்பது கூடுதல் செய்தி. திருமழிசை ஆழ்வார் என்னும் திரைப்படத்தில் ஒரே சமயத்தில் கிருஷ்ணராகவும், சிவனாகவும் காட்சி தந்துள்ளார். சிவனாக நடித்த போது நிஜபாம்பை தலையில் வைத்துக் கொண்டு நடிக்குமளவுக்கு தைரியமானவர். நடிப்பிலும் நடனத்திலும் புகழின் உச்சியில் இருந்தாலும் அவருக்கான காதல் ஓவியத்துறையையே சுற்றி சுற்றி வந்தது. மீண்டும் ஓவியத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். நண்பர் பணிக்கரோடு வங்காளம் போன்ற பல இடங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அங்கு நந்தலால் போஸ், ஜாமினி ராய் போன்ற பிரபல ஓவியர்களையும் சந்தித்தார். சாந்தி நிகேதனில் ராம்கிங்கர்பேஜ் என்ற சிற்பியைக் கண்டு அவரது சிற்பத்திறமையினால்  ஈர்க்கப்பட்டார். ஏனெனில் ராம்கிங்கர்பேஜ் படிப்பறிவில்லாத காட்டுவாசிக் கலைஞர். காடுகளில் அலைந்து திரிந்து வாழ்ந்தவர். ஆனாலும் அவரது சிற்பத்துக்கு முன்னால் யாரும் நிற்க இயலாது. அப்படியொரு நேர்த்தி. அவரை இந்திய ரோட்டான் என்று சொல்லலாம் என்று ஒவியர் தனபால் அவரை பாராட்டுவார்.
கலையை வணிகமாக்கும் பலபேரில் சிலர் மட்டுமே தன்னை கலைக்காக முழுமையாக அர்பணிப்பர். அவ்வாறே பல வாய்ப்புகள் வந்தும் அவற்றினை அவர்  ஏற்கவில்லை. ராய் சவுத்ரி அவர்களின் அன்பாலும் ஓவியர் தனபாலின் தனிப்பட்ட  திறமையாலும் ஓவியக் கல்லூரியிலேயே பணியில் அமர்ந்தார், இவருடன் பயின்ற பல மாணவர்கள் அவரது சமகாலத்திலேயே பல மாநிலங்களில் பிரபலமாக இருந்தார்கள். ராய்சவுத்ரியின் ஆடை அமைப்பை முன்மாதிரியாக கொண்டு (பைஜாமா - ஜிப்பா) அதனையே அக்காலக் கட்டத்திலிருந்து தனது வழக்கமான ஆடை வடிவமைப்பாக மாற்றிக் கொண்டார். அவரது பாணியிலேயே பிற்கால ஓவியர்களும் அணியத் துவங்கினர் என்றே கூறலாம்.
அந்த காலகட்டத்தில் ஓவியர் ரவிவர்மனின் ஓவியங்கள் மட்டுமே பொதுமக்களுக்கு அறிமுகமாகயிருந்தது. பொது மக்களுக்கு ஓவியத்தின்பாற் ரசனையைத் தூண்ட முதன்முதலில் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி அவர்களும் அவரைத் தொடர்ந்து காமராஜ் அவர்களும் அவ்வப்போது ஓவியக் கண்காட்சிகள் நடத்த ஊக்கம் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது என்று ஓவியர் தனபால் தமது பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இதன் ஆரம்பமே அனைத்து ஓவியர்களின் ஒன்றுகூடலாக, தென்னிந்திய ஓவியங்கள் சொசைட்டிக்கு வித்திட்டது. இதனை அப்போது சென்னை கவர்னருக்குப் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த கர்னல் ரீட் என்பவர் துவங்கி வைத்தார். அதில் முக்கிய அங்கத்தினர்களாக ராய் சவுத்ரி, சையத் அகமது, கிருஷ்ணராவ், கலாசாகரம் ராஜகோபால், தனபால், பணிக்கர் ஆகியோர் இருந்தனர். இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாக பல கண்காட்சிகள் நடத்துவது மற்றும் மக்களின் ரசனைக்கு புத்துணர்வு ஊட்டவது .
ஓவியர் தனபால், ஓர் ஓவியத்தை ரசிக்கும் ரசிகன் எப்படி ரசிக்க வேண்டும் என்பதை பாஸ்கர தொண்டைமான் கூறிய ஒரு கவிதையை முன் வைக்கிறார். அந்த கவிதை இதோ…
காணுகின்ற காட்சியிலே
கவிந்து மனம்தான் லயித்துப்
பேணுகின்ற அனுபவத்தைப்
பிறரெல்லாம் அறியும் வண்ணம்
சொல்லாலோ இசையாலோ
சொலற்கரிய நடத்தாலோ
கல்லாலோ வனத்தாலோ
காட்டுவதே கலையாகும்.
இக்கவிதைப்படியே கலை இருக்க வேண்டும் என்பதை அவர் உணர்ந்திருந்தார். அதை உணராதவர்களால் அவருக்கு வருத்தம்தான்  மிஞ்சியது
இந்த பணிகள் ஒரு புறம் நடந்து கொண்டிருக்கும் போது இந்தியா சுதந்திரம் அடைந்தது. ராஜாஜி கவர்னர் ஜெனராலாகவும், முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் தமிழக அரசின் தொழிற்துறை அமைச்சராக பதிவியேற்றார். இதன் மூலம் ஓவியக்கலைக்கு பல புதிய வாய்ப்புகள் வந்தன. கும்பகோணத்தில் ஓவியக் கல்லூரியும் ஆரம்பிக்கப்பட்டது. பலருக்கும் ஓவியம் கற்க வாய்ப்பு ஏற்பட்டது. இதனால் திறமையுள்ள ஆசிரியர்கள் எங்கிருந்தாலும் வரவழைக்கப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டார்கள். பல மாணவர்களை அக்கல்லூரி சிறந்த கலைஞர்களாக மாற்றி காட்டியது  ஒரு
சாதனை என்றே சொல்லலாம்.

ஓவியர் தன்பால், 1945 இல் மீனாட்சி என்பரை மணந்தார். அவருக்கு மூன்று குழந்தைகள். அவரது இல்வாழ்க்கையும் பின்வரும் குறளின் வழி இனிதே அமைந்தது.
 அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழக்கை
பண்பும் பயனும் அது (குறள்-45)

இந்தியா சுதந்திரம் அடைந்த புதிதில், இங்கிலாந்து அரசு லண்டனில் இந்தியக் கலாச்சார விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. அதற்காக இந்தியாவிலிருந்து கொண்டு செல்லப்பட்ட கலைப் பொருட்கள், அவ்விழா முடிந்தபிறகு மீண்டும் டெல்லிக்கு கொண்டு வரப்பட்டு அங்கும் கண்காட்சி நடத்தப்பட்டது. அதனை பார்க்கும் வாய்ப்பு ஓவியர் தனபாலுக்கும், அவரது நண்பரான பணிக்கருக்கும் கிடைத்தது. ஓவியர் தனபால் அவ்விழாவை ரசித்து சொன்ன வார்த்தைகள்… ’ஏராளமான கலைப் படைப்புகளை ஒரே கூரையில் கீழ் கண்டு மகிழ்ந்ததை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது . அங்கு பாதக அர்த்தம் காட்டும் வலக்கையை விட காலுக்கு கீழே முயலகரை காட்டும் இடக்கை சற்று பெரியதாக இருந்த திருவாலங்காடு நடராஜர் சிலையை கண்டோம். தூரத்தில் சென்று பார்த்த போது அது சமமானதாகவே தோன்றியது. இப்படியொரு டைமன்ஷ்னல் எஃபெக்ட்டை மனதில் கொடுத்து வடித்த அந்த சிற்பியின்மீது பெரு மதிப்பு உண்டாயிற்று’ எனக் கூறினார். ஏற்கனவே அவர் ராய் சவுத்ரியின் சிற்பங்களைக் கண்டு ஆரம்பித்த ஆர்வம், இந்த திருவாலங்காடு சிற்பத்தை கண்டபின் சிற்பக்கலையின் மீதான ஆர்வத்தை மேலும் கூட்டியது. அதன்பின் சிற்பக்கலையிலும் தனபால் ஜொலிக்க ஆரம்பித்தார்.

தனபாலின் தமிழ் இலக்கியங்கள் மீதான ஆர்வத்துக்கு உடனிருந்தவர் பாவேந்தர் பாரதிதாசன். எப்போதும் கலைஞர்களை  உயர்ந்த இடத்தில் வைத்து மதித்தவர் பாரதிதாசன். அவ்வாறே ஓவியர் தனபாலின் மீதும் மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டிருந்தார். அந்நாளில் பாரதிதாசன், காமராஜர், ராதாகிருஷ்ணன், பெரியார் போன்றவர்களின் சிற்பங்களை தனபால் செதுக்கும் பாக்கியம் பெற்றிருந்தார். சென்னை ஓவியக்கல்லூரியின் ஓவியத்துறைக்கு ஆசிரியராக இருந்து பின் சிற்பத்துறைக்கும் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் வேறு யாருக்கும் வாய்த்திருக்க வாய்பில்லை. அதே நேரத்தில் கிராஃபிக்ஸ், ஸெராமிக் போன்ற துறைகளும் கல்லூரியில் புதியதாக அடியெடுத்து வைத்தன. அவற்றையும் விட்டுவிடவில்லை. அதிலும் அவரது பங்கு இருந்தது. சென்னை கலை மற்றும் கைவினைக் கல்லூரியில் 1940 முதல் 1977 வரை ஆசிரியராக இருந்து அதே கல்லூரியின் முதல்வராக ஒய்வு பெற்றார்.
ஒரு துறையில் ஜொலிக்கும் ஒருவருக்கே தனது துறையில் அவ்வளவு எளிதில் திருப்தி ஏற்படாது எனும்போது பன்முகத் துறையில் தன்னை புதுப்பித்துக் கொண்டு கோலோச்சியவர் எப்படி திருப்தி அடைவார்? இவ்வாறு அவரது பணிகள் தொடர்ந்துக் கொண்டே இருந்தன. ஓவியம், சிற்பம், நடனம், இலக்கியம், தாவரவியல் என பன்முக அறிவை அவர் வளர்த்தும் ரசித்தும் அதற்கான மரியாதையையும் தந்து வந்தார், அவரது வீட்டில் ஜப்பானியர்களின் போன்சாய் மரங்களை வளர்த்து வந்தார். ஜப்பானியர்கள் போன்சாய் மரம் வளர்ப்பது சிற்பக்கலையினை ஒத்தது என்பர். தனபால் அதனை முழுமையாக உணர்ந்து கொண்டாடியவர்.


கற்றுக்கொள்ளவும், அவருடன் உரையாடவும், பணிகளுக்கு உதவி செய்யவும் அவரைசுற்றி எப்போதும் பலர் உடனிருக்க, ஓவியங்களாலும் சிற்பங்களாலும் மட்டுமின்றி புதிய புதிய மாணவர்களாலும் சூழப்பட்ட அவர் கிட்டத்தட்ட ஒரு சரணாலயமாகவே வாழ்ந்தார் என்றே கூறலாம். அவரை தனித்து பார்ப்பது என்பது அரிது. அவரால் உருவான பல மாணவர்கள் இன்று பிரபலங்களாக உலகின் பல நாடுகளில் வாழ்கிறார்கள். இப்போதெல்லாம் எதையும் வணிக நோக்கில் கணக்கிடும் உலகத்தில் பணத்தின் மீது நாட்டம் கொள்ளாமல் வாழ்வின் இறுதி நாள்வரை கற்றுத் தருவதில் மகிழ்ச்சி கொண்டவர். இவர் சென்னை கலை - கைவினைக் கல்லூரியில் முதல்வராக இருந்தபோது, சக்திமிக்க ஒரு தலைமுறையினரை உருவாக்கி தமிழக உலகிற்கு அளித்துள்ளார். 2000ஆம் வருடம் மே மாதம் அவர் இறைவனடி சேர்ந்தாலும் உலகில் ஓவியமும் சிற்பமும் இருக்கும்வரை அவரது புகழ் கலையுலகத்தின் நாதமாக ஒலிக்கும்.

No comments:

Post a Comment

  வல்லம் ஏகெளரி அம்மன் - சிறப்புப் பார்வை முனைவர் பிரியாகிருஷ்ணன். பதிவு செய்த நாள் : 25.02.2024 அமைவிடம்: தஞ்சைக்கருகில் வல்லம் என்ற ஊரில...