
தமிழகச் சதிகற்கள் - ஒரு பார்வை
முனைவர்
பிரியாகிருஷ்ணன்
சதி என்றால் உண்மையுள்ள மனைவி என்று பொருள்.
இத்தகைய கற்புடைய பெண்டிருக்காக
எடுக்கப்படுவதே சதிகல். போரில் இறந்த வீரனின் மனைவி கணவனின் சிதையில் தீப்பாய்ந்து
உயிர் துறக்கும் நிகழ்வே சதி அல்லது உடன்கட்டை ஏறுதல் என அழைக்கப்பட்டது. இது
மனைவியின் சுயவிருப்பத்தின் பேரிலும், சில சமயம் உடன் இருப்பவர்களின் வற்புறுத்தல்
மற்றும் தற்காப்பு உள்ளிட்ட பல காரணங்களுக்காவும் உடன்கட்டை ஏறுதல் நிகழ்ந்ததாக அறிகிறோம்.
சதி, சஹகமணனம் (sahagamananam), அக்னிபிரவேசம்,
உடன்கட்டைஏறுதல், சிதைத்தீ, அக்கினி ஸ்நானம், தீப்பாய்தல் என பல பெயர்களில்
அழைக்கப்பட்ட இந்த நிகழ்வின் நினைவாக நினைவு கற்கள் ஏற்படுத்தப்பட்டன. காலப்போக்கில்
கணவன் போருக்கு சென்று மடிவது மட்டுமின்றி வேறு பல காரணங்களாலும் சதி ஏறுதல்
நிகழ்த்தப்பட்டதை காண்கிறோம்.
தமிழ் இலக்கியங்களில்
சதியேறுதல்:
தெய்வம் தொழா அள் கொழுநன்
தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை என்பது வள்ளுவன் வாக்கு.
பெண் சக்தி வாய்ந்தவள் என்ற நம்பிக்கைதான்
மக்களிடம் பெண் தெய்வங்கள் பல உருவாக காரணமாயின. ஆதி தாய் தெய்வம் முதல் இன்று வரை
உள்ள பெண் தெய்வங்களில் 90% கிராம தெய்வங்கள். காரணம் அனைத்து சிறு தெய்வங்களும் ஊருக்காகவோ
அல்லது ஏதோ ஒரு காரணத்திற்காக உயிர் துறந்த சாமானியப் பெண்கள் என்பதை இங்கு நினைவு
கூற வேண்டும். இதனை சமூக வாழ்க்கை கோட்பாடு என்னும் நூலில் ஹெர்பட் ஸ்பான்சர்,
”எல்லாக்
கோயில்களின் தோற்றத்தையும் ஆராய்ந்து
கொண்டு செல்வோமானால் அவை
இறந்தவர்களின்
சமாதியாகவோ அல்லது காணிக்கை
செலுத்தப்பட்டு
வழிபட்ட புனித இடமாகவோ
சுருங்கிவிடும்” என்பார்.
தகவுடை மங்கையர் சான்றாண்மை
சான்றார்
இகழினும் கேள்வரை எட்டி
இறைஞ்சுவர்’ என்ற
பரிபாடலும் (20-80-89) உடன்கட்டை ஏறிய
பெண்ணைப் பற்றி பகிர்கிறது.
மணிமேகலையில் சக்கரவாளக் கோட்டக் காதையை கூறும்
போது, கணவருடன் இறந்த பத்தினிக்காக எடுப்பித்தக் கோயில்களைச் சாத்தனார்
பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
அருந்தவர்க் காயினும் அரசர்க் காயினும்
ஒருங்குடன் மாய்ந்த பெண்டிர்க் காயினும்
இறந்தோர் மருங்கிற் சிறந்தோர் செய்த
குறியவும் நெடியவும் குன்றுகண்
சுடுமண் ஓங்கிய நெடுநிலை
கோட்டமும்..(மணி-6-54-59)
முலையும் முகனும்
சேர்த்திக் கொண்டான்
தலையொடு முடிந்த
நிலையொடு…(தொல்-பொருள்-1003,4)
------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------பேரிசை
மாய்ந்த மகனைச் சுற்றிய
சுற்றம்
மாய்ந்த பூசல் மயக்கத்
தானும்
தாமே எய்திய தாங்களும்
பையுளும்.. (தொல்-பொருள்-1007, 8, 9)
பாலை நிலையிலுள்ள பெண்கள் தம் கணவர் இறந்தபொழுது
உடன்கட்டை ஏறுதலும், தாபத நிலையிலுள்ள பெண்கள் உடன்கட்டை ஏறாது தம்மைத்தாமே
வருத்திக் கைம்மை பூண்டு தவம் புரிவதும், மூதானந்த நிலையிலுள்ள பெண்கள் கணவர்
இறந்தபொழுதே தாமும் உடனுயிர் துறப்பதும் மேற்காட்டிய பாடலுக்குப் பொருளாகும்.
தமிழ் இலக்கியங்கள், கணவனுக்காக உயிர் துறப்பதை
மூன்று நிலைகளாக வகைபடுத்துகின்றன. மூதானந்தம், தாபத நிலை, பாலை நிலை முறையே தலையன்பு,
இடையன்பு, கடையன்பு என வகைப்படுத்தப்படுகின்றன. கணவன் உயிர்துறந்த செய்தி அறிந்த மறுகணமே
உயிர் நீத்த நிலை. இதுவே மூதானந்தம். இது தலையன்பு எனப்படும் தன் கணவர், கண்முன் இறந்ததைப் பார்த்த . கோபெருந்தேவி அடுத்த
நொடி உயிர்துறந்ததை பின்வரும் பாடலால் அறியலாம். இதுவே தலையன்பு.
கெடுகவென் ஆயுளென
மன்னவன் மயங்கி வீழந் தனனே தென்னவன்
கோப்பெருந்தேவி குலைந்தனள் நடுங்கி
கணவனை இழந்தோர்க்குக் காட்டுவதில்லென்று
இணையடி தொழுதுவீழ்ந் தனளே மடமொழி
(சிலம்பு20-77-81)
உடன்கட்டை ஏறுதல் என்பது இறந்துப்பட்ட கணவன் வீரமரணம்
எய்தியதை அறிந்து கணவனுக்கு மூட்டும் சிதையில் தானும் வீழ்ந்து இறப்பது ஒரு வகை. இதுவே
பாலை நிலை. இது இடையன்பு எனப்படும். மகா பாரதத்தில் வாசுதேவன் இறந்ததும் அவரது மனைவிகளான
தேவ்கி,பத்ரா,ரோகினி,மதிரா ஆகிய நால்வரும் தீயில் வீழ்ந்து மாண்டனர்.(மகா பாரதம் XVI-8-71)
கணவன் இறந்த செய்தியைக் கேட்டு தீப்பாயச் சென்ற
பெண்ணை தடுத்து அவளை கைம்மை நோன்பு ஏற்க செய்வது தாபத நிலை அதாவது கடையன்பு எனப்படும்.
வால்மீகி இராமயணத்தில் போரில் இராவணன் இறந்த செய்தியை அறிந்த மண்டோதரி சடங்குகள் முடிந்து மீண்டும் நகருக்கு
திரும்பி கைம்மை நோன்பை ஏற்பதாக அறிகிறோம். (கம்ப இராமயணத்தில் கம்பர், மண்டோதரி கணவனின்
சிதையில் உயிர் துறப்பதாகக் கூறுகிறார்)
கைம்மை நோன்பு மேற்கொள்ளும் பெண்கள் வெள்ளரி
விதைபோன்ற நெய்யற்ற நீர்ச் சோறு, எள்ளுத் துவையல், பாயின்றி பருக்கைக் கற்கள் மேல்
படுத்தும் கைம்மை நோன்பு நோற்பர் என்றும்,உடன் உயிர் துறப்பதே சிறந்தது என்றும் பூதப்பாண்டியனின் தேவி பெருங்கோப்பெண்டு,
(புறம்-246) கூறுவதலிருந்தும்,அதே போல்
மற்றொருப் பாடலில் மனைவி இறந்தும் கணவன் உயிர் வாழ்வதையும் (புறம்-245) கூறுகின்றன.
தமிழகத்தின் சதிகற்கள்;
சதிகற்கள் இரண்டு வகைப்படும். கணவன் மரணம் அடைந்து
உயிர் துறக்கும் வகை ஒன்று. இந்த முதல் வகையை சஹகமணம் என்பர். மற்றொரு வகையானது, கணவன் இறந்தும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும்
ஒரு விதவைப்பெண் அல்லது கணவனுடன் நன்முறையில் வாழ்ந்து கொண்டிருக்கும் பெண் ஆகியவர்களின்
கற்புக்கான சோதனை வரும்போது தன் கற்பை நிருபிக்கும் பொருட்டு தீயில் வீழ்ந்து உயிர்
துறப்பது. (உம்.;ராமயணம் – சீதை சிதையேறுதல்). சிலசமயங்களில், கணவன் இறக்கும் போது
மனைவி கர்ப்பமாக இருந்தாலோ அல்லது பூப்யெய்துவதற்கு முன்னதாக இருந்தால் சதியேறுதல்
தடுக்கப்பட்டுள்ளது என்பதையும் அறிய முடிகிறது.

மேலும், மெகன்சி(makencie)யின் கையெழுத்துப் பிரதிகளில்
(D.3838) குரும்பர் இனத்தவர் கூட்டாக சதி நிகழ்வை நடத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சதிகற்களின் அமைப்பு
வட மாநிலங்களில்
காணப்படும் சதிகற்களில் கைச்சின்னம் மட்டுமே காணப்படுகிறது. சில சதிகற்களில் பல கைச்
சின்னங்கள் பதிக்கப்பட்டிருக்கும். அவை கூட்டாக சதியேறுதலை காண்பிக்கிறது. வட மாநிலங்களில்
சதி ஏறுவதற்கு முன்பாகவே போருக்கு செல்லும் கணவனிடம் அனுமதி கோரப்படுவதும் உண்டு. சதி
ஏறும் பெண்கள் தமக்காக வைக்கும் சதிகற்களில் சிவப்பு சாயம் பூசிய கரங்களால் பதிய வைப்பர்.
ஆடை அலங்காரம் எல்லாம் செய்து மிக்க மகிழ்ச்சியுடன் சதி ஏறுவர். ஆந்திரா, கர்நாடகா
வரை காணப்படும் சதிகற்களில் கம்பம் போன்ற அமைப்பும், அக்கம்பத்தின் உச்சியில் தோளுடன்
கூடிய வலது கரம் ஆசி வழங்கும் அபய முத்திரையோடும், சிலவற்றில் சந்திரன் சூரியன் சின்னங்களுடனும்
காணப்படுகின்றன. சதிகற்களில் கை வளையல்கள் பிரதானமாகக் காட்டப்பட்டிருக்கும். மங்கல
சின்னமான இவற்றுடன் மறுமையிலும் அதே கணவனுடன் வாழும் வாழ்க்கை வாய்க்கப் பெறும் என்பதாக
இது அமைக்கப்பட்டிருக்கும். பிற்காலத்தில் ஆந்திரா, கர்நாடகா, தமிழகம் போன்ற பகுதிகளில்
கணவன் மனைவியருடன் இருப்பது போலவும், போர் நிகழ்ந்த நிகழ்வுகளுடன் தேவர் உலகம் செல்லும்
வரை காட்சி அமைப்புகளுடன் ஒரே கல்லில் மூன்று, ஐந்து, மற்றும் ஏழு நிலைகளாக அமைக்கப்பட்டுள்ளது.
சில சதிகற்களில் எழுத்துகள் பொறிக்கப்பட்டும் காணப்படுகின்றன. வீரம் காட்டி இறக்காமல்
,தம் கணவரிடமுள்ள அன்பின் காரணமாக உயிர்த் தியாகம் செய்த பெண்களுக்கும் அவர்களது உருவம்
பொறிக்கப்பட்டும் அமைக்கப்படுவதுண்டு.
தமிழகத்தில்
கிடைக்கப்பெறும் பெரும்பாலான சதிகற்களில், கணவனோடு வீற்றிருக்கும் ஒரு மனைவி மற்றும்
கணவனோடு வீற்றிருக்கும் இரு மனைவியர் காட்சிப்படுத்தப்
பட்டுள்ளனர். எனினும், கணவன் மனைவியாக காட்சி தரும் அத்துனை கற்களும் சதிகல் என பொருள்
கொள்ள இயலாது. காரணம் சில நடுகற்கள், கோயிலுக்கோ அல்லது ஊருக்கோ தானம் அளித்தவர்களுக்காக
எடுக்கப்பட்டவையாக இருக்கும். இவ்வகை நடுகற்கள் கணவன் மனைவியாக கைக்கூப்பி வணங்கும்
நிலையிலும் காணப்படுவதுண்டு.
தமிழகத்தில்
இன்றும் சதிகற்களை வீரமாத்திக்கல் என்றும், சதிகற்கள் உள்ள கோயில்களை மாலைக் கோயில்
என்றும் வணங்கி வருகின்றனர். நாம் காணும் சதிகற்கள் வாயிலாக அக்காலப் பெண்டிரின் கற்பு,
தியாகம், காதல், வீரம், ஒழுக்கம், வாழ்க்கை முறை ஆகியவற்றை அறிந்து கொள்ள முடிகிறது.
துணை நின்ற
நூல்கள்
1.தென்னிந்திய
நடுகற்கள்- முனைவர்.வெ.கேசவராஜ்
2.நடுகற்கள்-ச.கிருஷ்ணமூர்த்தி
3.தமிழ்நாட்டில்
சதி என்னும் தற்பலி வழக்கம்
4புற நானூறு
5.பரிபாடல்
6.தொல்காப்பியம்
7..மணிமேகலை
8..சமூக
வாழ்க்கை நூல் கோட்பாடு-ஹெர்பட் ஸ்பென்சர்.
9.வாழ்வியலும்
வழிபாடும்-முனைவர்.க வீ.வேதநாயகம
*வெளியான இதழ்:செப்பேடு/சித்திரை 2018/இதழ்2