முனைவர் - முதுமுனைவர் -கவிஞர்- எழுத்தாளர் - தொல்லியல் ஆய்வாளர் -வரலாற்று ஆய்வாளர் - மானுடவியல் ஆய்வாளர் - நாட்டுப்புற ஆய்வாளர்-வானொலி அறிவிப்பாளர் - நிகழ்ச்சி தொகுப்பாளர் - நூலாசிரியர் - சமூக சேவகி -பேராசிரியை - கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் -இல்லத்தரசி. நிறுவனர்/நிர்வாக ஆசிரியர் அரண் பன்னாட்டுத் தமிழாய்வு மின்னிதழ் Please visit www.aranejournal.com
Monday, 31 August 2020
Tuesday, 19 May 2020
எங்களது webnar 1,2,3,4 ஆகியவற்றின் இணைப்புகள்;
அனைவரும் கண்டு பயன் அடைக.
https://www.youtube.com/watch?v=NwYGJAcQ8NM
https://www.youtube.com/watch?v=jl63fhRTMdM
https://www.youtube.com/watch?v=hMjFEO178B4
https://www.youtube.com/watch?v=aAwVubJhiEc
https://www.youtube.com/watch?v=D_f79BlLdrM&t=119s
https://www.youtube.com/watch?v=AnroZW9ZdBg
https://www.youtube.com/watch?v=FST2aZth4ig&t=15s
https://www.youtube.com/watch?v=-h8gD8KYMnA&t=4s
Saturday, 22 February 2020

தமிழகச் சதிகற்கள் - ஒரு பார்வை
முனைவர்
பிரியாகிருஷ்ணன்
சதி என்றால் உண்மையுள்ள மனைவி என்று பொருள்.
இத்தகைய கற்புடைய பெண்டிருக்காக
எடுக்கப்படுவதே சதிகல். போரில் இறந்த வீரனின் மனைவி கணவனின் சிதையில் தீப்பாய்ந்து
உயிர் துறக்கும் நிகழ்வே சதி அல்லது உடன்கட்டை ஏறுதல் என அழைக்கப்பட்டது. இது
மனைவியின் சுயவிருப்பத்தின் பேரிலும், சில சமயம் உடன் இருப்பவர்களின் வற்புறுத்தல்
மற்றும் தற்காப்பு உள்ளிட்ட பல காரணங்களுக்காவும் உடன்கட்டை ஏறுதல் நிகழ்ந்ததாக அறிகிறோம்.
சதி, சஹகமணனம் (sahagamananam), அக்னிபிரவேசம்,
உடன்கட்டைஏறுதல், சிதைத்தீ, அக்கினி ஸ்நானம், தீப்பாய்தல் என பல பெயர்களில்
அழைக்கப்பட்ட இந்த நிகழ்வின் நினைவாக நினைவு கற்கள் ஏற்படுத்தப்பட்டன. காலப்போக்கில்
கணவன் போருக்கு சென்று மடிவது மட்டுமின்றி வேறு பல காரணங்களாலும் சதி ஏறுதல்
நிகழ்த்தப்பட்டதை காண்கிறோம்.
தமிழ் இலக்கியங்களில்
சதியேறுதல்:
தெய்வம் தொழா அள் கொழுநன்
தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை என்பது வள்ளுவன் வாக்கு.
பெண் சக்தி வாய்ந்தவள் என்ற நம்பிக்கைதான்
மக்களிடம் பெண் தெய்வங்கள் பல உருவாக காரணமாயின. ஆதி தாய் தெய்வம் முதல் இன்று வரை
உள்ள பெண் தெய்வங்களில் 90% கிராம தெய்வங்கள். காரணம் அனைத்து சிறு தெய்வங்களும் ஊருக்காகவோ
அல்லது ஏதோ ஒரு காரணத்திற்காக உயிர் துறந்த சாமானியப் பெண்கள் என்பதை இங்கு நினைவு
கூற வேண்டும். இதனை சமூக வாழ்க்கை கோட்பாடு என்னும் நூலில் ஹெர்பட் ஸ்பான்சர்,
”எல்லாக்
கோயில்களின் தோற்றத்தையும் ஆராய்ந்து
கொண்டு செல்வோமானால் அவை
இறந்தவர்களின்
சமாதியாகவோ அல்லது காணிக்கை
செலுத்தப்பட்டு
வழிபட்ட புனித இடமாகவோ
சுருங்கிவிடும்” என்பார்.
தகவுடை மங்கையர் சான்றாண்மை
சான்றார்
இகழினும் கேள்வரை எட்டி
இறைஞ்சுவர்’ என்ற
பரிபாடலும் (20-80-89) உடன்கட்டை ஏறிய
பெண்ணைப் பற்றி பகிர்கிறது.
மணிமேகலையில் சக்கரவாளக் கோட்டக் காதையை கூறும்
போது, கணவருடன் இறந்த பத்தினிக்காக எடுப்பித்தக் கோயில்களைச் சாத்தனார்
பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
அருந்தவர்க் காயினும் அரசர்க் காயினும்
ஒருங்குடன் மாய்ந்த பெண்டிர்க் காயினும்
இறந்தோர் மருங்கிற் சிறந்தோர் செய்த
குறியவும் நெடியவும் குன்றுகண்
சுடுமண் ஓங்கிய நெடுநிலை
கோட்டமும்..(மணி-6-54-59)
முலையும் முகனும்
சேர்த்திக் கொண்டான்
தலையொடு முடிந்த
நிலையொடு…(தொல்-பொருள்-1003,4)
------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------பேரிசை
மாய்ந்த மகனைச் சுற்றிய
சுற்றம்
மாய்ந்த பூசல் மயக்கத்
தானும்
தாமே எய்திய தாங்களும்
பையுளும்.. (தொல்-பொருள்-1007, 8, 9)
பாலை நிலையிலுள்ள பெண்கள் தம் கணவர் இறந்தபொழுது
உடன்கட்டை ஏறுதலும், தாபத நிலையிலுள்ள பெண்கள் உடன்கட்டை ஏறாது தம்மைத்தாமே
வருத்திக் கைம்மை பூண்டு தவம் புரிவதும், மூதானந்த நிலையிலுள்ள பெண்கள் கணவர்
இறந்தபொழுதே தாமும் உடனுயிர் துறப்பதும் மேற்காட்டிய பாடலுக்குப் பொருளாகும்.
தமிழ் இலக்கியங்கள், கணவனுக்காக உயிர் துறப்பதை
மூன்று நிலைகளாக வகைபடுத்துகின்றன. மூதானந்தம், தாபத நிலை, பாலை நிலை முறையே தலையன்பு,
இடையன்பு, கடையன்பு என வகைப்படுத்தப்படுகின்றன. கணவன் உயிர்துறந்த செய்தி அறிந்த மறுகணமே
உயிர் நீத்த நிலை. இதுவே மூதானந்தம். இது தலையன்பு எனப்படும் தன் கணவர், கண்முன் இறந்ததைப் பார்த்த . கோபெருந்தேவி அடுத்த
நொடி உயிர்துறந்ததை பின்வரும் பாடலால் அறியலாம். இதுவே தலையன்பு.
கெடுகவென் ஆயுளென
மன்னவன் மயங்கி வீழந் தனனே தென்னவன்
கோப்பெருந்தேவி குலைந்தனள் நடுங்கி
கணவனை இழந்தோர்க்குக் காட்டுவதில்லென்று
இணையடி தொழுதுவீழ்ந் தனளே மடமொழி
(சிலம்பு20-77-81)
உடன்கட்டை ஏறுதல் என்பது இறந்துப்பட்ட கணவன் வீரமரணம்
எய்தியதை அறிந்து கணவனுக்கு மூட்டும் சிதையில் தானும் வீழ்ந்து இறப்பது ஒரு வகை. இதுவே
பாலை நிலை. இது இடையன்பு எனப்படும். மகா பாரதத்தில் வாசுதேவன் இறந்ததும் அவரது மனைவிகளான
தேவ்கி,பத்ரா,ரோகினி,மதிரா ஆகிய நால்வரும் தீயில் வீழ்ந்து மாண்டனர்.(மகா பாரதம் XVI-8-71)
கணவன் இறந்த செய்தியைக் கேட்டு தீப்பாயச் சென்ற
பெண்ணை தடுத்து அவளை கைம்மை நோன்பு ஏற்க செய்வது தாபத நிலை அதாவது கடையன்பு எனப்படும்.
வால்மீகி இராமயணத்தில் போரில் இராவணன் இறந்த செய்தியை அறிந்த மண்டோதரி சடங்குகள் முடிந்து மீண்டும் நகருக்கு
திரும்பி கைம்மை நோன்பை ஏற்பதாக அறிகிறோம். (கம்ப இராமயணத்தில் கம்பர், மண்டோதரி கணவனின்
சிதையில் உயிர் துறப்பதாகக் கூறுகிறார்)
கைம்மை நோன்பு மேற்கொள்ளும் பெண்கள் வெள்ளரி
விதைபோன்ற நெய்யற்ற நீர்ச் சோறு, எள்ளுத் துவையல், பாயின்றி பருக்கைக் கற்கள் மேல்
படுத்தும் கைம்மை நோன்பு நோற்பர் என்றும்,உடன் உயிர் துறப்பதே சிறந்தது என்றும் பூதப்பாண்டியனின் தேவி பெருங்கோப்பெண்டு,
(புறம்-246) கூறுவதலிருந்தும்,அதே போல்
மற்றொருப் பாடலில் மனைவி இறந்தும் கணவன் உயிர் வாழ்வதையும் (புறம்-245) கூறுகின்றன.
தமிழகத்தின் சதிகற்கள்;
சதிகற்கள் இரண்டு வகைப்படும். கணவன் மரணம் அடைந்து
உயிர் துறக்கும் வகை ஒன்று. இந்த முதல் வகையை சஹகமணம் என்பர். மற்றொரு வகையானது, கணவன் இறந்தும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும்
ஒரு விதவைப்பெண் அல்லது கணவனுடன் நன்முறையில் வாழ்ந்து கொண்டிருக்கும் பெண் ஆகியவர்களின்
கற்புக்கான சோதனை வரும்போது தன் கற்பை நிருபிக்கும் பொருட்டு தீயில் வீழ்ந்து உயிர்
துறப்பது. (உம்.;ராமயணம் – சீதை சிதையேறுதல்). சிலசமயங்களில், கணவன் இறக்கும் போது
மனைவி கர்ப்பமாக இருந்தாலோ அல்லது பூப்யெய்துவதற்கு முன்னதாக இருந்தால் சதியேறுதல்
தடுக்கப்பட்டுள்ளது என்பதையும் அறிய முடிகிறது.

மேலும், மெகன்சி(makencie)யின் கையெழுத்துப் பிரதிகளில்
(D.3838) குரும்பர் இனத்தவர் கூட்டாக சதி நிகழ்வை நடத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சதிகற்களின் அமைப்பு
வட மாநிலங்களில்
காணப்படும் சதிகற்களில் கைச்சின்னம் மட்டுமே காணப்படுகிறது. சில சதிகற்களில் பல கைச்
சின்னங்கள் பதிக்கப்பட்டிருக்கும். அவை கூட்டாக சதியேறுதலை காண்பிக்கிறது. வட மாநிலங்களில்
சதி ஏறுவதற்கு முன்பாகவே போருக்கு செல்லும் கணவனிடம் அனுமதி கோரப்படுவதும் உண்டு. சதி
ஏறும் பெண்கள் தமக்காக வைக்கும் சதிகற்களில் சிவப்பு சாயம் பூசிய கரங்களால் பதிய வைப்பர்.
ஆடை அலங்காரம் எல்லாம் செய்து மிக்க மகிழ்ச்சியுடன் சதி ஏறுவர். ஆந்திரா, கர்நாடகா
வரை காணப்படும் சதிகற்களில் கம்பம் போன்ற அமைப்பும், அக்கம்பத்தின் உச்சியில் தோளுடன்
கூடிய வலது கரம் ஆசி வழங்கும் அபய முத்திரையோடும், சிலவற்றில் சந்திரன் சூரியன் சின்னங்களுடனும்
காணப்படுகின்றன. சதிகற்களில் கை வளையல்கள் பிரதானமாகக் காட்டப்பட்டிருக்கும். மங்கல
சின்னமான இவற்றுடன் மறுமையிலும் அதே கணவனுடன் வாழும் வாழ்க்கை வாய்க்கப் பெறும் என்பதாக
இது அமைக்கப்பட்டிருக்கும். பிற்காலத்தில் ஆந்திரா, கர்நாடகா, தமிழகம் போன்ற பகுதிகளில்
கணவன் மனைவியருடன் இருப்பது போலவும், போர் நிகழ்ந்த நிகழ்வுகளுடன் தேவர் உலகம் செல்லும்
வரை காட்சி அமைப்புகளுடன் ஒரே கல்லில் மூன்று, ஐந்து, மற்றும் ஏழு நிலைகளாக அமைக்கப்பட்டுள்ளது.
சில சதிகற்களில் எழுத்துகள் பொறிக்கப்பட்டும் காணப்படுகின்றன. வீரம் காட்டி இறக்காமல்
,தம் கணவரிடமுள்ள அன்பின் காரணமாக உயிர்த் தியாகம் செய்த பெண்களுக்கும் அவர்களது உருவம்
பொறிக்கப்பட்டும் அமைக்கப்படுவதுண்டு.
தமிழகத்தில்
கிடைக்கப்பெறும் பெரும்பாலான சதிகற்களில், கணவனோடு வீற்றிருக்கும் ஒரு மனைவி மற்றும்
கணவனோடு வீற்றிருக்கும் இரு மனைவியர் காட்சிப்படுத்தப்
பட்டுள்ளனர். எனினும், கணவன் மனைவியாக காட்சி தரும் அத்துனை கற்களும் சதிகல் என பொருள்
கொள்ள இயலாது. காரணம் சில நடுகற்கள், கோயிலுக்கோ அல்லது ஊருக்கோ தானம் அளித்தவர்களுக்காக
எடுக்கப்பட்டவையாக இருக்கும். இவ்வகை நடுகற்கள் கணவன் மனைவியாக கைக்கூப்பி வணங்கும்
நிலையிலும் காணப்படுவதுண்டு.
தமிழகத்தில்
இன்றும் சதிகற்களை வீரமாத்திக்கல் என்றும், சதிகற்கள் உள்ள கோயில்களை மாலைக் கோயில்
என்றும் வணங்கி வருகின்றனர். நாம் காணும் சதிகற்கள் வாயிலாக அக்காலப் பெண்டிரின் கற்பு,
தியாகம், காதல், வீரம், ஒழுக்கம், வாழ்க்கை முறை ஆகியவற்றை அறிந்து கொள்ள முடிகிறது.
துணை நின்ற
நூல்கள்
1.தென்னிந்திய
நடுகற்கள்- முனைவர்.வெ.கேசவராஜ்
2.நடுகற்கள்-ச.கிருஷ்ணமூர்த்தி
3.தமிழ்நாட்டில்
சதி என்னும் தற்பலி வழக்கம்
4புற நானூறு
5.பரிபாடல்
6.தொல்காப்பியம்
7..மணிமேகலை
8..சமூக
வாழ்க்கை நூல் கோட்பாடு-ஹெர்பட் ஸ்பென்சர்.
9.வாழ்வியலும்
வழிபாடும்-முனைவர்.க வீ.வேதநாயகம
*வெளியான இதழ்:செப்பேடு/சித்திரை 2018/இதழ்2
Monday, 10 February 2020
தமிழக ஆளுமைகள்-1
இன்றைய காலகட்டத்தில் தமிழக ஆளுமைகளை நினைவுகூற வேண்டியது அவசியமானதாகும்.ஏனெனில் அடுத்த தலைமுறையினருக்கு தமிழகத்தின் அரும்பெரும் ஆளுமைகளை கொண்டு செல்ல வேண்டியது நமது கடமையாகும்.அவ்வகையில் இங்கு சில ஆளுமைகளை தொடர்ந்து பதிவிட இருக்கிறேன்.
கலைகளின் சரணாலமாக விளங்கிய ஓவியர் தனபால் - ஓர் பார்வை
கட்டுரையாளர் :முனைவர் பிரியா கிருஷ்ணன்
தொல்பழங்காலத்திலிருந்து இன்று வரை தொடர்ந்து, பல மாற்றங்களையும்
பரிணாமங்களையும் தன்னகத்தே கொண்ட கலைகளில் முதன்மையானதும் முக்கியமானதும்
ஓவியக்கலையாகும். தற்காலத்தில் உள்ள நவீனங்களையும், கால மாற்றத்துனூடே வரும் புதிய
கண்டுபிடிப்புகளையும் உள்வாங்கி தன் பழைமையினை இழக்காது உயிர்ப்போடு வாழும் ஒரு
கலை ஓவியக்கலை. சிறு கோடுகள் கீறல்களாக மாறி உருவங்களைத் தந்து அதனுள் வண்ணங்களைத்
தீட்டி பாறைகளிலும், சுவர்களிலும் எண்ணங்களின் வெளிப்பாடாய் குடியேறியது. அடுத்த
நிலையில் ஓவியங்கள் சிற்பங்களாக பரிணாமம் கொண்டு அவற்றிற்கு உயிர்ப்பாய் ஆடல், பாடல்,
கூத்து என வளர்ச்சி எய்தியது. ஒவ்வொன்றும் வெவ்வேறு தனித்துவத்தை அடைந்ததை
யாராலும் மறக்க இயலாது. ஒவ்வொன்றும் ஒன்றோடு ஒன்றாய் பின்னிப் பிணைந்தது. ரசிகனின்
கலை ஆர்வம் மட்டும், வெவ்வேறு ரசனைகளின் பிறப்பிடமாய் மாற அவனின் ரசனைக்கு
விருந்தாய் அமைந்த படைப்பாளிகள் வெகு சிலரே. அவர்களுள் என்றும் நம் நினைவில்
நின்று, தென்னகத்தின் நவீன ஓவிய சிற்ப இயக்கத்தின் முன்னோடியாக வாழ்ந்து காட்டி
நமக்கு வழிகாட்டியாக, மறைந்தும் உயிர்ப்பை நம்முள் விதைப்பவர் ஓவியர் தனபால்
என்றால் மிகையல்ல.
பல்லவர்கால ,சோழர்கால சிற்பங்கள் தொட்டு
வெளிநாட்டுச் சிற்பிகளான ரூதீன், ஹென்றி மூர் வரை பல்வேறு சிற்ப வெளிபாடுகளை தனது
சிற்பங்களில் உலகிற்கு காண்பித்தவர். இவரது சிற்பத்தில் உள்ள கோடுகள்தான் சிற்பத்தின்
இசை லயமான இலகுவும் உணர்ச்சிகளை மெலிதாக காட்டியும் உயிர்ப்போடும் இருந்தன; அவை மரபு,
நவீனத்துவம் என்ற பிரிவுகளை எல்லாம் எளிதாக கடத்தி செல்பவை. இவரது சிற்பங்கள் தமிழின்
அழகியல் கூறுகளை சுமந்து திரியும் அதிசய படைப்புகள். சிலுவை சுமக்கும் இயேசு முதல்
அவ்வையார் வரை பார்த்து பார்த்து ரசிக்க இரு கண்கள் போதாது. தமிழ் சிற்ப மரபை
ஒட்டி அருமையான சிற்பங்கள் இவரது படைப்புகளில் வெளிவந்தன.
ஓவியர் தனபால் தொடக்கக் காலத்தில் வண்ண
ஓவியங்களிலும் கோட்டுச் சித்திரங்களிலும் மேற்கத்திய நவீன சாயலுடன் தென்னிந்திய
புராதன கிராமிய ஓவிய சிற்பங்களின் அழகியலைப் படைத்தார். அவருக்கென்று தனியாக ஒரு
பாணி இருந்தது. அதன் மூலம் அவருடைய ஓவியங்கள் பிரபலம் அடைந்தன. பிற்காலத்தில்
அவரது சிறந்த சிற்பங்கள் மூலமும் தேசிய அளவில் அவருடைய புகழ் பரவியது. 1962 இல்
சிறந்த சிற்பத்திற்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. 1980 இல் தில்லி
லலித் கலா அகாதெமி தனபாலுக்கு 'பெல்லோ ஆப் தி அகாதெமி' என்னும் விருதை வழங்கியது. அவரது
புகழ்பெற்ற சிற்பங்கள் ஓவியங்கள் பலவும் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள
அருங்காட்சியகங்களில் இடம்பெற்றுள்ளன. அதேபோல் அவரால் உருவாக்கப்பட்ட பல தேசியத்
தலைவர்கள், கலைஞர்கள், இலக்கிய மேதைகள் ஆகியோரின் உருவச் சிற்பங்கள் புகழ் பெற்றவை
ஆகும். 1950-60 களில் செருமனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் ஓவியக் கண்காட்சிகளை
நடத்தினார். தனபாலின் ஓவியங்களும் சிற்பங்களும் சென்னைத் தேசிய கலைக்கூடம், புது
தில்லி நவீனக் கலை தேசிய காலரி, புதுதில்லி பாராளுமன்றம் ஆகிய இடங்களில்
இடம்பெற்றுள்ளன. .2007ஆம் ஆண்டில் அவருடைய சிறந்த 52 ஓவியங்கள்
இலண்டனில் உள்ள நோபிள் சேஜ் ஆர்ட் காலரியால் கௌவுரவிக்கப்பட்டது. இத்தகைய சிறப்பு
வாய்ந்த கலைமகளின் செல்லக் குழந்தை, நமது ஓவியர், சிற்பி தனபால். அவரது
கலைவாழ்க்கையினைப் பற்றி இக்கட்டுரை ஆராய்கிறது
ஒவியர் தனபால் அவர்கள் 3.3.1919-ஆம் ஆண்டு சென்னை மயிலாப்பூரில் பிறந்தார்.
இவர் தனது பிறந்தநாள் ஒரே எண்களில் இருப்பதே எனக்கு பெருமையாக உள்ளது என்று
மற்றவர்களிடம் அடிக்கடி சொல்வதுண்டாம். சிறு
வயது முதலே சின்னச் சின்ன நிகழ்வுகளையும் கூட கூர்ந்து நோக்கும் ஆற்றல் பெற்றவர்.
இளம் வயதிலேயே ஓவியம் வரைவதில் அதீத ஆர்வம் கொண்டவராக இருந்தார். ஒரு மாணவன்
எதிர்காலத்தில் இந்த துறையில் பிரகாசிப்பான் என்று ஒர் ஆசிரியரால் மட்டுமே எளிதில்
யூகிக்க முடியும். அவ்வாறே ஓவியர் தனபாலின் கலை ஆர்வத்தினை முதலில் உணர்ந்த
தமிழாசிருயரும் பிரபல தமிழறிஞருமான சீனி வேங்கடசாமி, ’நீ ஓவியக் கல்லூரியில்
சேர்ந்து கற்றுக் கொள், உனக்கு ஓவியம் நன்றாக வருகிறது’ என்று அறிவுரை
கூறியுள்ளார். அதனால் ஓவியக்கலையினை முறைப்படி கற்றுக்கொள்ளும் வாய்ப்பை
எதிர்நோக்கி காத்திருந்தார். இதனிடையில் தன் பள்ளி நண்பனின் வீட்டிற்கு அடிக்கடி
சென்று நண்பனின் தந்தையாரிடம் மரப்பொம்மை செய்வதை கற்றுக் கொணடார். மரத்திலான
பீர்க்கன்க்காய் பொம்மைதான் அவர் செய்த முதல் கலைவெளிப்பாடாம். இவ்வகையில் அவரது
ஆர்வம் மேலும் மேலும் வளர்வதை அறிந்த அவரின் அக்கா கணவர் ஒரு நாள் அவரை அழைத்துக்
கொண்டு போய் ஒரு போட்டோ ஸ்டியோவில் (ரத்னா அண்ட் கோ போட்டோ) சேர்த்துவிட, அது
அவருக்கு ஒரு பணியிடமாகவே தோன்றியது. அதனால் ஒன்று, இரண்டு, மூன்று என அடுத்தடுத்த
ஸ்டுடியோக்கள் மாற மூன்றாவதாக சேர்ந்த ஸ்டுடியோ முதலாளிக்கு ஓவியம் வரையத்
தெரிந்திருந்த காரணத்தால் அவருடன் இணைந்து பணியாற்றுவதில் விருப்பம் கொண்டார். தொடர்ந்து
முயற்சி செய்ததில் வெற்றிகரமாக கோவிந்த ராஜு நாயக்கரிடம் ஓவியம் கற்றுக் கொள்ள
வாய்ப்பும் கிட்டியது. அதன்பின் சென்னை ஓவியக் கல்லூரியில் சேர்ந்து ஓவியப்
பயிற்சி பெற்றார்.
ஓவியக் கல்லூரியில் முதல்வர் ராய் சவுத்ரியிடம் ஓவியம் மட்டுமல்லாது சிற்பக்கலையினையும்
கற்றுத் தேர்ந்தார் ஓவியர் தனபால். ஓவியம், சிற்பம் மட்டுமல்ல நடனத்திலும்
இசையிலும் ஆர்வம் இருந்ததால் காட்டுமன்னார் கோவில் முத்துக்குமாரசுவாமி
நட்டுவனாரிடம் முறைப்படி நடனத்தை கற்றார். அடுத்தக் கட்ட நிகழ்வாக அன்று
நாட்டியத்தில் பிரபலமாக இருந்த நடராஜன் -சகுந்தலா தம்பதியினருடன் இணைந்து
பெரியாழ்வார், புத்தா போன்ற நாட்டிய நாடகங்களை நடித்து பெயர் பெற்றார். அந்த
நாடகங்களில் பயன்படுத்தப்படும் அணிகலன்கள் மற்றும் உடைகள் ஆகியவற்றை வடிவமைத்து
தயாரிப்பதும் தானே செய்வதாக கூறி அதிலும் தனது ஈடுபாட்டினைக் காட்டினார். அதனால் ஓவியர்
தனபாலை நாடகத்தில் அறிமுகப்படுத்தும்போது சித்திரம் தனபால் என்றே அறிமுகப்
படுத்துவார்களாம். அவரது ஆர்வம் பரத நாட்டியத்தோடு நின்று விடவில்லை. அதன்
தொடர்ச்சியாக கதகளி குமாரிடம் கதகளியும், போலேநாத்திடம் கதக்கும் கற்றுத்
தேர்ந்தார். திரைப்படத்திலும் ஓவியர் தனபால் தனது முத்திரையை பதித்துள்ளார் என்பது
கூடுதல் செய்தி. திருமழிசை ஆழ்வார் என்னும் திரைப்படத்தில் ஒரே சமயத்தில்
கிருஷ்ணராகவும், சிவனாகவும் காட்சி தந்துள்ளார். சிவனாக நடித்த போது நிஜபாம்பை
தலையில் வைத்துக் கொண்டு நடிக்குமளவுக்கு தைரியமானவர். நடிப்பிலும் நடனத்திலும்
புகழின் உச்சியில் இருந்தாலும் அவருக்கான காதல் ஓவியத்துறையையே சுற்றி சுற்றி
வந்தது. மீண்டும் ஓவியத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். நண்பர் பணிக்கரோடு
வங்காளம் போன்ற பல இடங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அங்கு நந்தலால் போஸ்,
ஜாமினி ராய் போன்ற பிரபல ஓவியர்களையும் சந்தித்தார். சாந்தி நிகேதனில்
ராம்கிங்கர்பேஜ் என்ற சிற்பியைக் கண்டு அவரது சிற்பத்திறமையினால் ஈர்க்கப்பட்டார். ஏனெனில் ராம்கிங்கர்பேஜ்
படிப்பறிவில்லாத காட்டுவாசிக் கலைஞர். காடுகளில் அலைந்து திரிந்து வாழ்ந்தவர். ஆனாலும்
அவரது சிற்பத்துக்கு முன்னால் யாரும் நிற்க இயலாது. அப்படியொரு நேர்த்தி. அவரை
இந்திய ரோட்டான் என்று சொல்லலாம் என்று ஒவியர் தனபால் அவரை பாராட்டுவார்.
கலையை வணிகமாக்கும் பலபேரில் சிலர்
மட்டுமே தன்னை கலைக்காக முழுமையாக அர்பணிப்பர். அவ்வாறே பல வாய்ப்புகள் வந்தும் அவற்றினை
அவர் ஏற்கவில்லை. ராய் சவுத்ரி அவர்களின்
அன்பாலும் ஓவியர் தனபாலின் தனிப்பட்ட திறமையாலும் ஓவியக் கல்லூரியிலேயே பணியில்
அமர்ந்தார், இவருடன் பயின்ற பல மாணவர்கள் அவரது சமகாலத்திலேயே பல மாநிலங்களில்
பிரபலமாக இருந்தார்கள். ராய்சவுத்ரியின் ஆடை அமைப்பை முன்மாதிரியாக கொண்டு (பைஜாமா
- ஜிப்பா) அதனையே அக்காலக் கட்டத்திலிருந்து தனது வழக்கமான ஆடை வடிவமைப்பாக மாற்றிக்
கொண்டார். அவரது பாணியிலேயே பிற்கால ஓவியர்களும் அணியத் துவங்கினர் என்றே கூறலாம்.
அந்த காலகட்டத்தில் ஓவியர் ரவிவர்மனின்
ஓவியங்கள் மட்டுமே பொதுமக்களுக்கு அறிமுகமாகயிருந்தது. பொது மக்களுக்கு
ஓவியத்தின்பாற் ரசனையைத் தூண்ட முதன்முதலில் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி
அவர்களும் அவரைத் தொடர்ந்து காமராஜ் அவர்களும் அவ்வப்போது ஓவியக் கண்காட்சிகள்
நடத்த ஊக்கம் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது என்று ஓவியர் தனபால் தமது பேட்டி
ஒன்றில் கூறியுள்ளார். இதன் ஆரம்பமே அனைத்து ஓவியர்களின் ஒன்றுகூடலாக, தென்னிந்திய
ஓவியங்கள் சொசைட்டிக்கு வித்திட்டது. இதனை அப்போது சென்னை கவர்னருக்குப்
பாதுகாப்பு அதிகாரியாக இருந்த கர்னல் ரீட் என்பவர் துவங்கி வைத்தார். அதில்
முக்கிய அங்கத்தினர்களாக ராய் சவுத்ரி, சையத் அகமது, கிருஷ்ணராவ், கலாசாகரம்
ராஜகோபால், தனபால், பணிக்கர் ஆகியோர் இருந்தனர். இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாக
பல கண்காட்சிகள் நடத்துவது மற்றும் மக்களின் ரசனைக்கு புத்துணர்வு ஊட்டவது .
ஓவியர் தனபால், ஓர் ஓவியத்தை ரசிக்கும்
ரசிகன் எப்படி ரசிக்க வேண்டும் என்பதை பாஸ்கர தொண்டைமான் கூறிய ஒரு கவிதையை முன்
வைக்கிறார். அந்த கவிதை இதோ…
காணுகின்ற
காட்சியிலே
கவிந்து மனம்தான் லயித்துப்
பேணுகின்ற அனுபவத்தைப்
பிறரெல்லாம் அறியும் வண்ணம்
சொல்லாலோ இசையாலோ
சொலற்கரிய
நடத்தாலோ
கல்லாலோ வனத்தாலோ
காட்டுவதே
கலையாகும்.
இக்கவிதைப்படியே கலை இருக்க வேண்டும்
என்பதை அவர் உணர்ந்திருந்தார். அதை உணராதவர்களால் அவருக்கு வருத்தம்தான் மிஞ்சியது
இந்த பணிகள் ஒரு புறம் நடந்து
கொண்டிருக்கும் போது இந்தியா சுதந்திரம் அடைந்தது. ராஜாஜி கவர்னர் ஜெனராலாகவும், முன்னாள்
ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் தமிழக அரசின் தொழிற்துறை அமைச்சராக பதிவியேற்றார். இதன்
மூலம் ஓவியக்கலைக்கு பல புதிய வாய்ப்புகள் வந்தன. கும்பகோணத்தில் ஓவியக்
கல்லூரியும் ஆரம்பிக்கப்பட்டது. பலருக்கும் ஓவியம் கற்க வாய்ப்பு ஏற்பட்டது. இதனால்
திறமையுள்ள ஆசிரியர்கள் எங்கிருந்தாலும் வரவழைக்கப்பட்டு பணியில்
அமர்த்தப்பட்டார்கள். பல மாணவர்களை அக்கல்லூரி சிறந்த கலைஞர்களாக மாற்றி காட்டியது
ஒரு
சாதனை என்றே சொல்லலாம்.
ஓவியர் தன்பால், 1945 இல் மீனாட்சி என்பரை
மணந்தார். அவருக்கு மூன்று குழந்தைகள். அவரது இல்வாழ்க்கையும் பின்வரும் குறளின்
வழி இனிதே அமைந்தது.
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழக்கை
பண்பும் பயனும் அது (குறள்-45)

தனபாலின் தமிழ் இலக்கியங்கள் மீதான
ஆர்வத்துக்கு உடனிருந்தவர் பாவேந்தர் பாரதிதாசன். எப்போதும் கலைஞர்களை உயர்ந்த இடத்தில் வைத்து மதித்தவர் பாரதிதாசன்.
அவ்வாறே ஓவியர் தனபாலின் மீதும் மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டிருந்தார்.
அந்நாளில் பாரதிதாசன், காமராஜர், ராதாகிருஷ்ணன், பெரியார் போன்றவர்களின்
சிற்பங்களை தனபால் செதுக்கும் பாக்கியம் பெற்றிருந்தார். சென்னை ஓவியக்கல்லூரியின்
ஓவியத்துறைக்கு ஆசிரியராக இருந்து பின் சிற்பத்துறைக்கும் ஆசிரியராக பணியாற்றிய
அனுபவம் வேறு யாருக்கும் வாய்த்திருக்க வாய்பில்லை. அதே நேரத்தில் கிராஃபிக்ஸ்,
ஸெராமிக் போன்ற துறைகளும் கல்லூரியில் புதியதாக அடியெடுத்து வைத்தன. அவற்றையும்
விட்டுவிடவில்லை. அதிலும் அவரது பங்கு இருந்தது. சென்னை கலை
மற்றும் கைவினைக் கல்லூரியில் 1940 முதல்
1977 வரை ஆசிரியராக இருந்து அதே கல்லூரியின் முதல்வராக ஒய்வு பெற்றார்.
ஒரு துறையில் ஜொலிக்கும் ஒருவருக்கே தனது
துறையில் அவ்வளவு எளிதில் திருப்தி ஏற்படாது எனும்போது பன்முகத் துறையில் தன்னை
புதுப்பித்துக் கொண்டு கோலோச்சியவர் எப்படி திருப்தி அடைவார்? இவ்வாறு அவரது
பணிகள் தொடர்ந்துக் கொண்டே இருந்தன. ஓவியம், சிற்பம், நடனம், இலக்கியம், தாவரவியல்
என பன்முக அறிவை அவர் வளர்த்தும் ரசித்தும் அதற்கான மரியாதையையும் தந்து வந்தார், அவரது
வீட்டில் ஜப்பானியர்களின் போன்சாய் மரங்களை வளர்த்து வந்தார். ஜப்பானியர்கள் போன்சாய்
மரம் வளர்ப்பது சிற்பக்கலையினை ஒத்தது என்பர். தனபால் அதனை முழுமையாக உணர்ந்து
கொண்டாடியவர்.

Subscribe to:
Posts (Atom)
வல்லம் ஏகெளரி அம்மன் - சிறப்புப் பார்வை முனைவர் பிரியாகிருஷ்ணன். பதிவு செய்த நாள் : 25.02.2024 அமைவிடம்: தஞ்சைக்கருகில் வல்லம் என்ற ஊரில...

-
உலகம் வியக்கும் கலைகள் பல.அவற்றில் கட்டிடக்கலையும் ஒன்று.. அரசர்,இறைவன்,மக்கள் என்று மூன்று பிரிவுகளில் கட்டிடக்கலையினை அடக்கலாம்.ஆய கலைக...
-
தூத்துக்குடி மாவட்டம்,ஒட்டப்பிடாரம் தாலுக்காவைச் சேர்ந்த முறம்பன் என்னும் கிராமத்தில் இருக்கும் குளத்திற்கு வடக்குப் புறமாக அரியவகை நாயக...
-
நிலம் சார்ந்த சமூகத்தின் அத்தனை அடிப்படை வாழ்வியல் கூறுகளிலும் தனது மேலாண்மைத் திறனை புகுத்தி, அதனை அன்றைய உலகுக்கு எடுத்துகாட்டிய தமி...