சென்னை அருகே கால்நடைகளின்
நோய் தீர்க்கும் ’கோமாரிக்கல்’ கண்டுபிடிப்பு.
சென்னை வண்டலூரை
அடுத்த இரத்தினமங்கலம் எனும் ஊரில் களஆய்வு மேற்கொண்ட தென்னகத் தொல்லியல் வரலாற்று
ஆய்வு நடுவத்தின் தலைவராக இருக்கும் பேராசிரியை - தொல்லியல் ஆய்வாளர், முனைவர் பிரியா
கிருஷ்ணன் இதைபற்றி கூறியதாவது,
’பரபரப்பாய் இயங்கிக்
கொண்டிருக்கும் சென்னை மாநகரில் பல நிலப்பகுதிகள் கட்டிடங்களாக மாறி இயற்கையைத் தொலைத்து உருமாறிப்போனது என்பது உண்மைதான். எனினும் சில பாரம்பரிய நம்பிக்கைகளும்
பழக்கவழக்கங்களும் தொடர்ந்து கொண்டேதான் வருகிறது. ரத்னமங்கலத்தின் ஒரு தெருவோரத்தில்
காணப்பட்ட இந்த கல்லை மக்கள், சன்னியாசிக்கல், கோமாரிக்கல், மந்தைக்கல், சிலைக்கல்,
மந்திரக்கல் போன்ற பல பெயர்களில் அழைப்பதுண்டு. தமிழகத்தின் சில பகுதிகளில் குறிப்பாக
தருமபுரி மாவட்டம், சேலம், வட ஆற்காடு, தென் ஆற்காடு ஆகிய மாவட்டங்களில் இந்த சன்னியாசிக்கல்
வழிபாடு அதிகமாக காணப்படுகிறது. இன்றும் இவ்வழிபாடு நடைமுறையில் இருந்துவருவது கவனிக்கத்தக்க
ஒன்றாகும்.
ஆங்கிலேயர்கள்
ஆட்சி செய்த வந்த காலத்தில் கால்நடைகளுக்கு
’கோமாரி’ என்னும் நோய் தாக்கியது. இதிலிருந்து கால்நடைகளைக் காப்பாற்ற சன்னியாசிக்கல்
வழிபாடு துவங்கியது. இந்நோய், காலில் குளம்புகள் உள்ள கால்நடைகளான பன்றி, ஆடு, மாடுகளை
பாதித்தது. குறிப்பாக மாடுகளை அதிகம் பாதித்தது. இதனால் கால்நடைகள் உணவு உண்ணாமலும்,
பால் கறக்காமலும் துடித்தன. தற்போது அதற்கான தடுப்பூசிகள் வந்துவிட்டன. என்றாலும்,
மருந்து கண்டறியாத அக்காலத்தில் அந்த நோயிலிருந்து விடுபட சீர் செய்யப்பட்ட ஒரு பலகைக்கல்லில்
சில மந்திர எழுத்துகள் அல்லது குறியீடுகளை, கட்டங்கள் போட்டு, அந்த கட்டங்களின் உள்ளே
எழுதுவர். 18 முதல் 108 கட்டங்கள் வரை கற்களில் எழுதியிருக்கும். இதனை நிலத்தில் நட்டு
,நோயுற்ற மாடுகளை இந்த கல்லின் அருகே அழைத்து வந்து பூசை செய்வார்கள். இந்த கோமாரிக்கல்
வழிபாடு ஒவ்வொரு பகுதியிலும் வேறுபடுகிறது. சில இடங்களில் மாடுகளை இந்த கல்லில் கட்டி
வைத்து விடுவார்கள். சில இடங்களில் கோமாரி கல்லின் மீது குடத்து நீரை ஊற்றி, கல்லிலிருந்து
வழியும் நீரை மாடுகளைவிட்டு தாண்ட வைப்பார்கள். சில இடங்களில் மாடுகளை இந்த கல்லை சுற்றி
வரவும் வைப்பார்கள். இதில் எழுதப்பட்டிருக்கும் எழுத்துகள் மந்திரம் உருவேற்றப்பட்ட
தாயத்து என்று நம்புகிறார்கள். மாட்டுப் பொங்கல் தினத்தன்று எல்லா மாடுகளுக்கும் இக்கல்லின்
முன்பாக பூசை செய்து அபிஷேக நீரைத் தாண்ட செய்து வழிபாடுகள் செய்வதும் உண்டு.
ரத்னமங்கலத்தில்
காணப்பட்ட இந்த கோமாரிக்கல்லை அப்பகுதி மக்கள் கோமாரிக்கல் என்றே அழைக்கிறார்கள்.அவ்வூரில்
இக்கல்லை தொடர்ந்து பரம்பரையாக வணங்கி வரும் உமா என்பவர் இன்றும் மூதாதையர் வழி வாரந்தோறும் வெள்ளியன்று வழிபாடு செய்து வருவதாகவும் ,நோயுற்ற
மாடுகளை இக்கல்லைச் சுற்றி வரச்செய்து பூசை செய்யும் வழக்கம் இன்றுவரை இருந்து வருகிறது
என தெரிவித்தார்..இந்த கோமாரிக் கல்லின் அமைப்பைக் கொண்டு இதன் காலம் 100 முதல்
200 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கலாம் என்று பிரியா கிருஷ்ணன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment