Thursday, 13 October 2016

புதுக்கவிதை வடிவில் திருக்குறள்




தகையணங் குறுத்தல்






அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு / 1081
   
அவள் விண்ணில் இருக்க வேண்டியவள்
மண்ணில் அவள் பாதம் பட்டதால்
பூமி பூப்புடைகிறது
மயங்கும் மனதுக்கு விடை எது?

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்னது உடைத்து / 1082

ஓராயிரம் வேல் கொண்டு
தாக்கிய உணர்வு இவளது
கடைப்பார்வைக்கு என்றால்
கட்டழகி என்னை
வெட்டி வீழ்த்திவிட்டாளே
பட்டென்று பார்வையில்
  
பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமார்க் கட்டு / 1083

உயிரோடு உயிர் விலகுவதை
கண்டு கொண்டேன்
பெண்ணே!
உன் பார்வை என்ன 
எமனின் தூதுவனா?

கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண் / 1084

பெண்ணே நீ கத்தியின்றி ரத்தமின்றி
கண்களால் கொலை செய்ய
தெரிந்த அழகிய இராட்ஸசி!

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கம்இம் மூன்றும் உடைத்து  / 1085
  
நீ
என்ன பாடசாலை?
எல்லாவற்றையும் கண்களாலே
விளக்கி விடுகிறாயே..
மானைப் போன்ற கண்கள்
துள்ளிகுதித்தாடும் கண்கள்
உயிரை ஊனுடன் பறித்தெடுக்கும் கண்கள்
ஐயோ!
சர்வகலா சாலையில்
நித்தமும் கீதம் பாடுபவள் நீ !

கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞார்
செய்யல மன்இவள் கண் / 1086 

பெண்ணே,
இரண்டு வானவில்லை
கொண்டுள்ள அழகிய நிலவு
உன் கண்கள்:
வளைந்த புருவம் நேரானால்
உன் கண்களின் வீச்சிலிருந்து
தப்பித்துக் கொள்வேனோ

கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில் / 1087 

யானைக்கு முகபடாம் போட்டு மறைத்ததை போல
உன் மனதையும்
மூடாதே பெண்ணே!
மேகம் மறைத்தாலும்
நிலவு தெரிகிறதே!

ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்கும்என் பீடு / 1088
  
ஆயிரம் பேரை வென்று
பரணி கொண்டவன் நான்!
உன் நெற்றிவாள் என்னை
வீழ்த்தியதடி ஒரு நொடியில்.

பிணையோர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணிஎவனோ ஏதில தந்து / 1089

மானின் கண்கள்
பட்டாசுப் பார்வை
மேகம் மூடும் நாணம்
இவற்றைவிட உனக்கு அழகு
சேர்க்க அணிகலன்கள் உண்டா?

உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று / 1090

தொட்டதும் போதை தரும்
மதுவை விட,
கண்டதும் காதல் தரும் உன்
கண்களை விட
வேறெதும் மகிழ்ச்சி உண்டா?

(முப்பால் தந்த முதல்கவிதை (2010) 
ஆசிரியர் – பிரியா கிருஷ்ணன் 
– கவிதை நூலிலிருந்து, இன்பத்துபாலின் முதல் அதிகாரம்.)

1 comment:

  1. அருமையாக படைத்திருக்கிறீர்கள். இப்படி ஆக்கிக் கொடுத்தால் மாணவர்களுக்கு எளிதில் புரிந்திடும்.

    "ஓராயிரம் வேல் கொண்டு
    தாக்கிய உணர்வு இவளது
    கடைப்பார்வைக்கு என்றால்
    கட்டழகி என்னை
    வெட்டி வீழ்த்திவிட்டாளே
    பட்டென்று பார்வையில்"
    சொற்கள் தெறித்து வந்து விழுந்துள்ளது.
    தொடருங்கள். பாராட்டுகள்

    ReplyDelete

  வல்லம் ஏகெளரி அம்மன் - சிறப்புப் பார்வை முனைவர் பிரியாகிருஷ்ணன். பதிவு செய்த நாள் : 25.02.2024 அமைவிடம்: தஞ்சைக்கருகில் வல்லம் என்ற ஊரில...