மரக்காணத்திற்கு முன்னதாக – கடற்கரை சாலையிலிருந்து மூன்று கி.மீ கடலை நோக்கி பயணித்தால் வரும் இந்த புராதன இடம்.
இடது சுவர்ப்பகுதி முழுதும் கடலலைகள் மோத – வெறும் மணற்குவியலாக காட்சியளிக்கும் இந்த கோட்டைக்கு வெளியே, சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் மீனவக் கிராமம் ஒன்றையும் பார்க்க முடிகிறது. அங்கிருக்கும் மீனவர்களுக்கு வருமானம் என்பது மீன்பிடித் தொழில் மற்றும் அங்குவரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு படகுசவாரி செய்வதன் மூலம் கிட்டுகிறது.
கி பி 17-லிருந்து 18-ஆம் நூற்றாண்டுக்குள் கட்டப்பட்ட இந்தக் கோட்டையினை, கி பி 1750-ல் ஆங்கிலேயரை எதிர்க்க உதவிய பிரெஞ்சு தளபதி டியூப்ள்ஸ்க்கு, சுபேதார் முசாபர்ஜங் பரிசளித்துள்ளார். கி பி 1760-ல் பிரெஞ்சுப் படையினை வெற்றிக் கொண்ட ஆங்கிலேய படை இக்கோட்டையினை கைப்பற்றிச் சிதைத்துள்ளது.
மழைக்காலங்களில் சரிந்து விழும் சுவர்களும், உப்புக்காற்றில் கரையும் கற்களும், மரங்கள் படர்ந்து மறைக்கப்பட்ட மதில்களும் இன்னும் எத்தனை நாளைக்கு இருக்கும் எனத் தெரியவில்லை..காரணம், காலத்தின் கரங்கள் இதன் தோற்றத்தை வெகுவாக சுரண்டிக்கொண்டிருக்கின்றன - தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டுள்ள போதிலும்.
செங்கல் மற்றும் சுண்ணாம்பு கலவையைக் கொண்டு சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட இக்கோட்டை இப்போது சிதைந்த நிலையிலும் தனது சமகால வரலாற்றை நினைவுப் படுத்திக் கொண்டுதான் நிற்கிறது. இக்கோட்டையின் அன்றைய நாணயச் சாலையின் பொறுப்பு அதிகாரத்தை வகித்த ’பொட்டிபத்தன்’ என்பவர், கடப்பாக்கம் காசி விஸ்வநாதர் கோவிலையும் அதனருகில் ஒரு குளத்தையும் வெட்டினான். அது
மட்டுமல்லாது காசி யாத்திரை செல்லும் யாத்திரிகர்கள் தங்கிச் செல்வதற்கு ஏதுவாக ஒரு சத்திரத்தையும் கட்டி வைத்தான்.
இது காசிப்பட்டை என இன்றும் குறிப்பிடப்பட்டு, அந்த பெருவழி தற்போது கோட்டைக்கு மேற்கில் 2 மைல் தூரத்தில் செல்கிறது.
*
தொல்லியல் துறையால் இங்கு வைக்கப்பட்டுள்ள பலகையில் எழுதப்பட்டுள்ள வரலாறு… ’கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள ஆலம்பரை, பண்டைய நாளில் ஒரு துறைமுகப் பட்டினமாகத் திகழ்ந்துள்ளது. சங்ககால இலக்கியமான சிறுபாணாற்றுப்படையின் மூலம் இப்பகுதி இடைக்கழி நாடு என பெயர் பெற்றிருந்ததாக அறியப்படுகிறது. கி.பி.18 ஆம் நூற்றாண்டில் முகமதியர்களால் ஆலம்பரையில் கோட்டை கட்டப்பட்டது.
செங்கற்களாலும் சுண்ணாம்பினாலும் கட்டப்பட்ட சதுர வடிவிலான கண்காணிப்பு நிலை மாடங்களுடன் அமைந்துள்ள இக்கோட்டை சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.
நவாபுகளின் ஆட்சிக்காலத்தில் ஆலம்பரை துறைமுகப் பட்டினமாக திகழ்ந்துள்ளது. இக்கோட்டையின் கீழ்ப்புறம் படகுத்துறை ஒன்று கப்பலில் உள்ள பொருட்களை ஏற்றி இறக்க அமைக்கப்பட்டுள்ளது. படகுத்துறையின் நீளம் சுமார் 100 மீட்டர் ஆகும்.
அவற்றின் பகுதிகள் தற்போதும் காணப்படுகின்றன.
ஆலம்பரை படகுத்துறையிலிருந்து சரிகைத் துணிவகைகள், உப்பு, நெய் போன்றவை
ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. ஆலம்பரையில் அமைந்திருந்த நாணயச் சாலையில், ஆலம்பரைக் காசு, ஆலம்பரை வராகன் ஆகிய நாணயங்கள் அச்சடிக்கப்பட்டன. இந்நாணயச் சாலையின் பொறுப்பாளராக இருந்த பொட்டிபத்தன், கிழக்கு கடற்கரை வழியாக காசி, இராமேஸ்வரத்திற்கு தீர்த்தயாத்திரை செல்லும் யாத்திரிகர்களுக்காகச் சிவன் கோயிலையும், பெரிய குளம் மற்றும் சத்திரத்தினையும் ஏற்படுத்தினார். .தமிழ்நாடு தொல்லியல் துறை இச்சின்னத்தினைப் பராமரித்து பாதுகாத்து வருகிறது’
*
தொல்லியல் துறையினரால் அகழ்வாராச்சி செய்யப்பட்டு, ஆற்காடு நவாப் தோஸ்த் அலிகான் காலத்தில் பயன்படுத்திய கல்லால் ஆன பீரங்கிக் குண்டுகள், ஈயக் குண்டுகள், பீங்கான் பாத்திரங்கள், மண்பானை ஓடுகள், காசுகள் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட செப்பால் ஆன ஆலம்பனப் பொருட்களின் மிச்சங்கள், புகைப் பிடிக்கும் சுருள் குழாய்கள், இரும்புக் கழிவுகள், விலங்குகளின் எலும்புகள் போன்றவை மட்டுமின்றி, குழந்தைகளின் விளையாட்டில் பயன்படும் வட்டச்சில்லுகள், வட்டச்சுற்றி, தாயத்து, கண்ணாடிப் பொருட்கள் போன்றவையும் கிடைத்துள்ளன.
சுற்றுலாவாசிகள் வந்துபோகும் இக்கோட்டையும் அதனை சார்ந்து அமைந்துள்ள கடற்கரை மிக ரம்மியமாகக் காட்சி அளிக்கிறது. வரலாற்றுச் சுவடுகளை இன்றும் பறை சாற்றிக் கொண்டிருக்கும் இந்த ஆலபராக் கோட்டையினை பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும்..
No comments:
Post a Comment