Saturday, 9 December 2017

இலக்கியத்தில் கட்டிடக் கலை

உலகம் வியக்கும் கலைகள் பல.அவற்றில் கட்டிடக்கலையும் ஒன்று..
அரசர்,இறைவன்,மக்கள் என்று மூன்று பிரிவுகளில் கட்டிடக்கலையினை அடக்கலாம்.ஆய கலைகள் அறுபத்தினான்கு.இந்த  கலைகளில் கட்டிடக்கலையும் ஒன்று. மாளிகைகளைக் குறிப்பிடும் போது குறிப்பாக செல்வந்தர்களின் மாளிகைகள் வடக்கு நோக்கியோ, கிழக்கு நோக்கியோ அமைக்கப்பட்டிருந்தது.(திருவிளையாடற் புராணம்-3;41)மாளிகைகளில் காலதர் என்று அழைக்கப்படும் காற்று வந்து செல்ல ஏதுவாக சாளரம்(ஜன்னல்) அமைக்கப்பட்டிருந்தது.சாளரத்துக்கு நிகரான நேர்வாய்க்கட்டளை ,புழை என்ற சொற்களும் இலக்கியத்தில் காணப்படுகிறது.
 சிலம்பில்(2;22-23) ,
மாலைத் தாமத்து மணிநிரைத்து வகுத்த
கோலச் சாளரக் குறுங்கண்
சாளரங்களில் மணிமாலைகள் தொங்கவிடப்பட்டிருந்தன என்பதை எடுத்துரைக்கிறது…(.தொடரும்…1)

இலக்கியத்தில் கட்டிடக் கலை(2)
  மாளிகைகள் எழுநிலை மாடங்களாக அமைக்கப்பட்டிருந்தன. வாயில்களுக்கு நேராகச் சாளரங்கள் அமைக்கப்பட்டிருந்தன.இதற்கு நேர்வாய்க்கட்டளை  என்று பெயர்.
நெடுநல்வாடையில்(60-62) ,
வானுற நிவந்த மேனிலை மருங்கில்
வேனிற் பள்ளித் தென்வளி தரூஉம்
நேர்வாய்க் கட்டளை ….என்று எடுத்துரைக்கிறது.இது வேனிற்காலத்தில் பயன்படுவது.
கூதிர்காலத்தில்(கடுங்குளிர்) நேர்வாய்க் கட்டளை அமைப்பு இருக்காது.அதற்கு பதில்காற்று அதிகம் நுழையாதாவாறு குறுங்கண்
சாளரங்கள் அமைக்கப்பட்டிருந்தன..குறுங்கண் வழியாக வரும் காற்றுக்குகூட ஆற்றாமல் மக்கள் அதனையும் அடைத்து முடங்கி இருந்தனர் என்பதனை,
வேனிற் பள்ளி மேவாது கழிந்து
கூதிர்ப் பள்ளி குறுங்கண் அடைத்து
என வரும் சிலம்பு(4;60-61) வரிகளால் அறியலாம்….(தொடரும்)
இலக்கியத்தில் கட்டிடக் கலை(3)

இலக்கியத்தில் எழுநிலை மாடத்தின் திறந்த நிலை மேல் தளம்(மொட்டை மாடி) வேயா மாடம் என அழைக்கப்பட்டது.இதனை நிலாமுற்றம் என்றும் சொல்லுவார்கள்.
நிலவுப்பயன் கொள்ளும் நெடுநிலா முற்றம்….
என்று சிலம்பும் (4;31),நெடுநல்வாடையும் (95) சுட்டுகிறது.
செல்வந்தர்களுக்கு அடுத்து வேளாளர்கள்.இவர்கள் வேளாண்மையை ஆதாரமாக கொண்டவர்கள்.ஆதலால் இவர்கள் வீடுகளை குதிர்,கொட்டில்,படப்பை,முன்றில்,தூண்,பந்தல் என பல வகைகளில் அமைத்துக் கொண்டனர்.
தானியங்கள் சேமிக்க குதிர்கள் பயன்பட்டன.இவை பெரிய பெண் யானை அளவு இருந்தனவாம்.குதிர்களைக் கட்டுவதற்கு முன்றில்கள் வடிவமைக்கப்பட்டன.கலப்பைகளை பாதுகாக்க நெடுஞ்சுவர் கொண்ட கொட்டில்கள் அமைக்கப்பட்டிருந்தன.(பெரும்பாண்;188-189,354-355)
(
தொடரும்..)
இலக்கியத்தில் கட்டிடக் கலை(4)
வீட்டுக்குத் தேவையான பொருட்களை விளைவித்துக் கொள்ள வீட்டுக்குப் பின்னே வீட்டுத் தோட்டம் அமைக்கும் பழக்கம் அந்த காலத்திலும் இருந்தது. சங்க கால மக்கள் வீட்டுத் தோட்டத்தை  படப்பை என்பார்கள்.(பெரும்பாண்-354-355)
குதிர்களைக் கட்டுவதற்கு முன்றில் அமைக்கப்பட்டது போன்றே,வீட்டுக்கு முன்னே முன்றில்கள் இருந்தன.முன்றிலிலும் மரம்,செடி,கொடிகள் வளர்க்கப்பட்டன.முன்றிலில் இருந்த விளா மரத்தில் பிற மான்களைப் பிடிக்க பயன்படுத்தப் படும் பார்வை என்னும் மான் கட்டப்பட்டிருந்ததை பெரும்பாணற்றுப்படை (95-96) எடுத்துரைக்கிறது..முற்றத்தில் தூண்கள் நடப்பட்டிருந்தன.இத்தூண்கள் வீட்டுக் கூரைகளைத் தாங்கும் தாங்கிகளாகச் செயல்பட்டன.தூண்களிலும் கன்றுகளை கட்டியிருந்தனர்.வெயில் வீட்டினுள் நேரடியாக பாயாதிருக்க முன்றிலில் பந்தல் போடப்பட்டிருந்தது.
(தொடரும்…)

இலக்கியத்தில் கட்டிடக் கலை(5)
சங்க காலத்திலும் ஏழை எளிய மக்களின் வீடுகள் குடிசைகளாகவே இருந்தது என்பதை இலக்கியங்கள் பகிர்கின்றன. இவ்வகையான வீடுகள் பெரும்பாலும் ஓடுகளாலும் ,சில கூரைகளாலும் வேயப்பட்டிருந்தன.ஏதாவது ஒரு பொருளால் வேயப்பட்ட வீட்டினை குரம்பை  என்பார்கள். குரம்பைகளை பற்றி ஒரளவு தெளிவு பெற கடியலூர் உருத்திரங் கண்ணனார் இயற்றிய பெரும்பாணாற்றுப் படை பெரிதும் உதவுகிறது.
பாலை நிலத்தில் எயினர்கள் ஈந்துக்(ஈச்சமரம்) குரம்பையில் வாழ்ந்தனர்.ஈந்தின் இலைகளில் முட்கள் உண்டு.ஆதலால் அணிலும் கருப்பை (எலி)யும் ஓடாதிருக்க இதனை பயன் படுத்தினர்.மருத நிலத்தில் நெல் மிகுதி..எனவே நெல் வைக்கோல் கொண்டு வேயப்பட்ட நெல்குரம்பை வீடுகள் அதிகம் இருந்தன.நெய்தல் நிலத்தில் தருப்பைப் புல்(நாணல்) அதிகம் விளைந்தது.அதனால் நெய்தல் நில வலைஞர்கள் கொம்புகளை இடையில் நிறுத்தித் தாழை நாரால் இறுகக் கட்டினர்.அதன்மீது தருப்பைப் புல்லை வேய்ந்து தருப்பைக் குரும்பை கட்டினர்.தென்னந்தோப்பில் வாழ்ந்தோர் தென்னை ஓலைகளை பாய்ப் போல் பின்னி,தெங்கு மடல் குரம்பையை ஏற்படுத்திக் கொண்டனர்.
(தொடரும்..)

இலக்கியத்தில் கட்டிடக் கலை(6)
சங்ககால மக்கள் இறைவனுக்கு நிகராக மன்னர்களை மதித்தனர்.அரசன் இறை என அழைக்கப்பட்டான்.அவன் வாழும் அரண்மனை கோயில் எனப்பட்டது.அரசனுக்குரிய அரண்மனை நூலறிவு கொண்ட சான்றோர்கள் கொண்டு அமைக்கப்பட்டது.மன்னனின் அரண்மனையை முதலில் ”திருமுளை சார்த்தி” என்னும் முறையிலிருந்து ஆரம்பிப்பர்.அதாவது அரண்மனைக்கு என வகுக்கப்பட்ட இடத்தில் வடக்கிலும் தெற்கிலும் இரண்டு கோல்கள்  நடப்படும்.அவற்றின் இடையே நடப்பட்ட  குச்சிகளில் இருந்து கிழக்கு  மேற்காகச் சூரியனின் நிழல் விழும் வேளையை எதிர்நோக்கிக் கண்காணித்துக் கொண்டிருப்பர்.நேர் ஒழுங்கில் சூரியனின் நிழல் விழும் சமயம் அரண்மனைக்குத் திருமுளை சார்த்தத் தகுந்த வேளையாகக் கொள்ளப்படும்.
சிற்ப நூல் வல்லுநர்கள்  நுட்பமாக  நூலைப் பிடித்து அளந்து அரண்மனைக்கான கால்கோளை வகுக்கத் தொடங்குவர்.அந்தந்த திசைகளுக்குரிய தெய்வங்களைத் தொழுவர்.தொடரும்…

இலக்கியத்தில் கட்டிடக் கலை(7)

சித்திரைத் திங்களில் முதல் பத்து நாட்களும் .இறுதிப் பத்து நாட்களும் 
நீங்களாக நடுவில் உள்ள பத்து நாட்களில் யாதேனும் ஒரு நாளில் பகற்பொழுது பதினைந்தாம் நாழிகையில் தெற்கு வடக்காக நடப்பட்ட கோல்களில் நேர் ஒழுங்கில் சூரியனின் நிழல் விழும் என்னும் வான நூல் அரிவியலை நம் முன்னோர்கள் அறிந்திருந்தனர்.
இந்நுட்பத்தினை  நெடுநல்வாடையும்,சிலம்புமும்  பின்வருமாறு தெளிவுபடுத்துகிறது.
விரிகதிர் பரப்பிய வியன்வாய் மண்டிலம்

இருக்கோற் குறிநிலை வழுக்காது குடக்குஏர்பு

ஒருதிறம் சாரா அரைநாள் அமையத்து

நூலறி புலவர் நுண்ணிதின் கயிறுஇட்டு

தேஎம் கொண்டு தெய்வம் நோக்கி

பெரும்பெயர் மன்னர்க்கு ஒப்ப் மனைவகுத்து…(நெடுநல்_73-78)

விரிகதிர் பரப்பிய வியன்வாய் மண்டிலம்

இருக்கோற் குறிநிலை வழுக்காது குடக்கோல்

பொறுதிறந் சாரா அரை நாள் அமையத்து

நூலறி புலவர் நுண்ணுதிற் கயிறிட்டுத்

தே எங் கொண்டு தெய்வம் நோக்கி

பெரும் பெயர் மன்னர்க்கொப்ப மனைவகுத்து

உலவுத் தலைவந்த பெருநாள் அமையத்து

இருசுடர் தம்முள் நோக்கி ஒரு சுடர்

புன்கண் மாலை மலை மறைந்தாங்கு..(சிலம்பு)
(தொடரும்…..)

இலக்கியத்தில் கட்டிடக் கலை(8)

அரசி முதலான பெண்டிர் வாழும் பகுதியை இலக்கியங்கள் அந்தப்புரம் என்கிறது.அந்தப்புரம் என்பது நெடிதுயர்ந்த அளவில் அமைக்கப்பட்டிருந்தது.அந்தப்புரம் முழுவதும் வெள்ளியை ஒத்த சாந்தைக் கொண்டு சுவர்கள் முழுமையும் பூசப்பட்டிருந்தது.வலிமை வாய்ந்த தூண்கள் அமைக்கப்பட்டிருந்தது.சுவரெங்கும் அழகிய ஓவியங்களால் வரையபப்பட்டிருந்தன.இதனை நெடுநல்வாடை (108-113),
வரை கண்டன்ன தோன்றல் ,வரைசேர்பு
வில் கிடந்தன்ன கொடிய ,பல்வயின்
வெள்ளி அன்ன விளங்கும் சுதைஉரீஇ
மண் கண்டன்ன மத்திரள் திண்காழ்
செம்பு இயன்றன்ன செய்வுறு நெடுஞ்சுவர்
உருவப் பல்பூஒரு கொடி வளைஇ
என்று சித்திரிக்கின்றது.

தொடரும்..

இலக்கியத்தில் கட்டிடக் கலை(9)
அரண்மனை மதிலின் வாயிலில் உயர்ந்த நிலைகளைக் கொண்ட கோபுர வாயில்கள் அமைக்கப்பட்டன.மதிலின் வாயிலில் ஆணிகள்,பட்டங்கள்,பிணிக்கப்பட்ட திண்ணிய கதவுகள் பொருத்தப்பட்டன.உத்திரகற்கவி என்னும் மரத்தாலான பலகை நிலைவாயிலில் பொருத்தப்பட்டது.உத்திரம் என்னும் பலகையில் குவளை மலர்களைத் துதிக்கையில் ஏந்திய யானைகள் இரண்டு புறத்திற்கு ஒன்றாக நிற்பது போல் அமைக்கப்படும் பலகையே உத்தரகற்கவி எனப்பட்டது.கதவுகள் செவ்வரக்கு கொண்டு தேய்த்து பளபளப்பாக்கப்பட்டன.கதவின் மூட்டு வாயில்கள் வெளிப்படா வண்ணம் தொழில் நுட்பம் சிறந்திருந்தது.கதவில் தாழ்ப்பாள் அமைக்கப்பட்டது.கதவும் ,நிலையும் மின்ன தேய்க்கப்பட்ட செவ்வரக்கின் மீது நெய்யும்,ஐயவியும்(கடுகு)பூசித் தேய்க்கப்பட்டன.
(தொடரும்…)

இலக்கியத்தில் கட்டிடக் கலை(10)
கோட்டை வாயில் மன்னனின் வீரத்திற்கு அடையாளமாக விளங்கியது.பகைவர்களுடன் போரிட்டு வென்று அவர்களின் பற்களைக் கோட்டைக் கதவுகளில் பதித்தனர்.மூவன் ,எழினி,இவர்களின் வலிமையான பற்கள் பறிக்கப்பட்டு கோட்டைக் கதவுகளில் பதித்த செய்தியை இலக்கியங்கள் (நற்றிணை18,அகம்;211) சுட்டுகின்றன.
அடுத்ததாக இரகசிய வழிகள்,மாடம் மீதிருந்த சுருங்கை வழிகள் அமைக்கப்பட்டன.இவை,
நிலவறை வழியாக ,நிதியம் காக்கும் அருங்கலன் இருக்கையாகவும்,குடிநீர் வழங்கும் புழையாகவும்,அரசர்,அரண்மனைப் பெண்டிரின் அவசரக் காலத் தப்புகைத் தடமாகவும்,சாய்க்கடை வழியாகவும் பயன்பட்டன என்று இலக்கியங்கள் வாயிலாக அறிகிறோம்.
பிறிதொரு தலைப்பில் மீண்டும் சந்திக்கலாம்.
(முகநூல் பதிவிற்காக எழுதப்பட்டு என்னால் பதிவிடப்பட்டவை)



  வல்லம் ஏகெளரி அம்மன் - சிறப்புப் பார்வை முனைவர் பிரியாகிருஷ்ணன். பதிவு செய்த நாள் : 25.02.2024 அமைவிடம்: தஞ்சைக்கருகில் வல்லம் என்ற ஊரில...