Monday, 25 September 2017

தூத்துக்குடி அருகே 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரியவகை நீர்பாசன அடைவுத் தூண் கல்வெட்டு கண்டுபிடிப்பு.

தூத்துகுடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே உள்ள முறம்பன் பகுதியை சேர்ந்த ’தர்மத்தாய் ஊருணி’ என்று அழைக்கப்படும் ஏரிக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட களஆய்வின் போது, லிங்கம் வடிவில் நான்கு தூண்கள் கண்டறியப்பட்டன. அந்த தூண்கள் சற்று  வித்தியாசமான தோற்றத்துடன் லிங்க வடிவில் காணப்பட்டது. அதில் ஒரு தூண் நிலத்தில் ஊன்றப்பட்டும், மற்ற மூன்று தூண்கள் சிதைந்தும் உடைந்தும், கீழே விழுந்திருந்த நிலையிலும் காணப்பட்டன. அங்கு சிவன் கோவில் இருந்தற்கான அடையாளங்களும் இருந்தன. இப்போதும் சிறியதாய் சிவன் சன்னதி ஒன்றும் உள்ளது. ஆனால் தூணின் கீழ்பகுதியில் காணப்பட்ட கல்வெட்டைப் பார்த்த போதுதான் இந்த தூண் ஏரிக்கு தானமாக வழங்கப்பட்ட ஒரு நடுகல் கல்வெட்டாக கூட இருக்கலாம் என்று ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.  நான்கு தூண்களில் ஒரு தூணின் தலைப்பகுதியில் ’மாலை வரி’ என அழைக்கப்படும் சிற்ப வேலைபாடும் செய்யப்பட்டிருந்தது.அதன் கீழ் பகுதியில் இரு புறமும் கல்வெட்டு எழுதப்பட்டிருந்தது.மற்ற மூன்றுதூண்களில் ஒரு புறம் மட்டும் கல்வெட்டு எழுதப்பட்டிருந்தது. ஆய்வின் சிறப்புச் செய்தியாக இன்று ’முறம்பன்’ என்று அழைக்கப் படுகிற இந்த ஊர் சோழர்காலத்தில் ’நுரம்பன்’ என அழைக்கப்பட்டதாகத் தெரியவருகிறது. அதே போல் இதனருகே ’பன்னூர்’ என்ற ஓர் ஊர் இருந்ததாகவும் தெரிகிறது. சோழர் காலத்துக்கு உரியதாக கருதப்படும் இந்த கல்வெட்டு, கி பி 13-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி, அல்லது 14 நூற்றாண்டின் முற்பகுதியாக இருக்கலாம். இந்த அடைவுத் தூணின் கல்வெட்டு படி ,

1
1.ஸ்வஸ்திஸ்ரீ
2.நுரம்பனூ
3.ர்ருகு நாலா
4.ம் அடைவு பி
5.டாரன் கம்பன்
6.னான சோழகுல
7.சுந்தர மூவேந்த
8.வேளான் தன்ம{ம்}

2
1.ஸ்வஸ்திஸ்ரீ
2.த் தம்ம{ம்} அர
3.ங்கன் சேர
4.ளன்
{சேரளன் - சோளன்}

*
1.ஸ்வஸ்திஸ்ரீ
2.பன்னூ{ர்}
3.கு மூத்த அ
4.டவு{ மாலய
5. த்திகைய{ன்}
6.உத்தம பாண்{டி}
7.ய மூவேந்த வே
8.ளார்

*
1.{பி}லாயம்
2.வீரபாண்டி{ய}
3.மூ வேந்த வே
4.{ளா}ர் தன்மம் உ
*
1.ஸ்வஸ்திஸ்ரீ
2.ரம்பனூ
3.{த்}த அடை..
4.{தென்}

ஒழுங்குபடுத்தப்பட்ட தூண்களாக இருப்பினும் அவற்றின் கீழ்பகுதி நிலத்தில் ஊன்றுவதற்கு ஏதுவாக ஒழுங்கற்றவையாக காணப்படுகின்றன. ‘அடவு’ அல்லது ’அடைவு’ என்பது அவர்கள் செய்த தன்மமாக (கொடை) தெரிகிறது. மூத்த அடவு, நான்காம் அடைவு என்றும் வரிசைப் படுத்தப்பட்டுள்ளன.
’தர்மத்தாய் ஊருணி’ எனப்படும் இந்த ஏரியானது  நுரம்பன்{முறம்பன்}, பன்னூர் ஆகிய இரண்டு ஊர்களுக்கு நீர்பாசனம் செய்வதற்கு பயன்பட்டிருக்கிறது. இதனால் இந்த ஏரி அக்காலத்தில் மடை, மதகு ஆகியவற்றுடன் கூடிய பெரிய ஏரியாக இருந்திருக்கலாம் .
அதே சமயம் ’நுரம்பனூருக்கு’, ’பன்னூர்க்கு’ என்ற சொல்லாட்சிகள் உள்ளதால் அந்தந்த ஊர்களுக்கு அந்தந்தப் பகுதி(அடைவு) நீர்ப்பாசன வசதியை உரிமையாக்கியதாகவோ அல்லது அதனை பயன்படுத்தும் வரிசை கிரம (மரியாதையை) உரிமையைக் கொடுத்ததாகவோ கருதலாம். எனவே இத்தூண்கள்  கொடையாக கொடுக்கப்பட்ட அடையாளத் அடைவுத்தூண்களாகவே நாம் பொருள் கொள்ள வேண்டியுள்ளது.
.
    1.உத்தம பாண்டிய மூவேந்தவேளார்
    2.வீரபாண்டிய மூவேந்த வேளார்
    3.பிடாரன் கம்பனான சோழகுல சுந்தர மூவேந்த
     வேளார்
    4.அரங்கன் சோளன்(சேரளன்)

’மூவேந்த வேளார்’ எனும் பட்டத்துக்குரிய அரச உயர் அதிகாரிகள், இந்த ஏரிக்கு தன்மமாக அடைவுத் தூண்களை தந்துள்ளார்கள் என்பது தெளிவு. கல்வெட்டில் எழுத்துகள் அழிந்திருப்பதாலும் விடுபட்டு இருப்பதாலும் இது இன்னும் மீளாய்வுக்கு உட்பட்டதாகவே கருதப்படுகிறது.
எனது கள ஆய்வில் ,ஏரிக்கு தானமாக கொடுக்கப்பட்ட அடைவுத்தூண் பற்றிய செய்தி இன்றையச் செய்தித்தாளில்,

அரிய வகை நாயக்கர் கால நடுகல் கண்டுபிடிப்பு

தூத்துக்குடி மாவட்டம்,ஒட்டப்பிடாரம் தாலுக்காவைச் சேர்ந்த முறம்பன் என்னும் கிராமத்தில் இருக்கும் குளத்திற்கு வடக்குப் புறமாக அரியவகை நாயக்கர் கால நடுகல்லை பேராசிரியர் மற்றும் தொல்லியல் ஆய்வாளர் முனைவர் ப்ரியாகிருஷ்ணன், தொல்லியல் ஆர்வலர் வினோத் ஆகியோரால் கண்டுப்பிடிக்கப்பட்டது.

இதுகுறித்து தென்னகத் தொல்லியல் வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் ப்ரியாகிருஷ்ணன் கூறியதாவது பண்டையக் காலத்தில்  வீரமரணம் அடைந்த அரசர்களுக்கும் வீரர்களுக்கும் நடுகல் எடுக்கும் வழக்கம் இருந்துவந்தது.இந்த நடுகல் கிபி 16 அல்லது கிபி 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.செவ்வியல் அழகோடு மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ள இந்த நடுகல் அரியவகையைச் சார்ந்தது,கர்நாடகத்தில் கிடைக்கும் நடுகல்லைப் போன்று நுணுக்கமாகக் காணப்படுகிறது.நடுகல்லில் இருக்கும் சிற்பத்தைப் பார்க்கும்போது நாயக்கர் கால சிற்பங்களை ஒத்துள்ளது.அரசனுக்கோ அல்லது குறுநில அரசனுக்கோ எடுத்த நடுகல்லாக இருக்கலாம்.நடுகல்லின் மையப் பகுதியில் அரசன் குதிரையின் மீது அமர்ந்துக் கொண்டு போரிடுவதுப் போலவும்,அதனை எதிர்க்கும் வீரன் கையில் கேடயமும் வாளும் கொண்டு போரிடுவதுப் போலவும் ,போர்களத்தில் குதிரைகள் வீழ்வதுப் போலவும் ,அதனுடனே வீரர்களும் வீழ்வதுப் போலவும் நடுகல்லின் கீழ்பகுதியில் காட்சிப்படுத்தி இருப்பதால் போர்களத்தில் இறந்துப்பட்ட அரசனுக்கு எடுத்த நடுகல்லாக இருக்கலாம் .மேலும்  நடுகல்லின் மேற்புறத்தில்  வீரமரணம் எய்திய அரசனை தேவ உலகப் பெண்கள் மாலையிட்டு தேவர் உலகிற்கு அழைத்துச் செல்வது போலவும் காட்சிப்படுத்தியிருப்பது நோக்கத்தக்கது.பொதுவாக நாயக்கர் காலத்தில் கணவன் இறந்ததும் உடன்கட்டை ஏறும் பழக்கம் பரவலாக இருந்துவந்தது.அதனால் அரசனின் மனைவிமார்கள் உடன்கட்டை ஏறியக் காட்சியாகக் கூட இருக்கலாம் என்று கூறினார்.இவ்வளவு சிறப்பு வாய்ந்த நடுகல்லை இன்றும் சோலை ராஜா என்ற பெயரில் நாயக்கர் இன மக்கள் தம் குலதெய்வமாக வணங்குகிறார்கள். வருடந்தோறும் தை மாதம் தைப்பூசம் அன்று திருவிழாவாகக் கொண்டாடி வருகின்றனர் என்றும்,இவர்கள் அனைவரும் வெவ்வேறு ஊர்களுக்கு இடம் பெயர்ந்து சென்றுவிட்டார்கள் என்றும் கூறினார்.

Monday, 4 September 2017

23/08/2017-நாளிதழில் எனது கள ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட நடுகல் பற்றிய செய்தி-HERO STONE





  வல்லம் ஏகெளரி அம்மன் - சிறப்புப் பார்வை முனைவர் பிரியாகிருஷ்ணன். பதிவு செய்த நாள் : 25.02.2024 அமைவிடம்: தஞ்சைக்கருகில் வல்லம் என்ற ஊரில...