Monday, 10 July 2017

தொன்மை அறிவோம் #10- தாண்டிக்குடி- Dr .பிரியா கிருஷ்ணன்

https://youtu.be/xd9NUsr7vg8

தொன்மை அறிவோம்#12- ஒட்ஸி (பனி) மனிதன் - Dr .பிரியா கிருஷ்ணன்

https://youtu.be/6brrdlq2YFc

தொன்மை அறிவோம்# 11-கடல் கடந்த லிங்கம்-Dr பிரியா கிருஷ்ணன்

https://youtu.be/UGRcR2tWgT4

பெரும்பாணாற்றுப்படையில் நெல் சோறு

                         பண்டைத் தமிழர் பண்புகளுள் விருந்தோம்பல் தனிச் சிறப்புடையது;உணவும்,விருந்தும் பற்றி தமிழ் இலக்கியங்கள் பலவாறு செப்புகின்றன. பண்டைத் தமிழர்கள் சுவைமிக்க உணவுப் பொருள்களைச் சமைப்பதில் தேர்ந்து இருந்தனர். அவரவர்கள் வாழ்ந்த நிலத்திற்க்கு ஏற்ப உணவு வகைகள் வேறு பட்டன.மரக்கறி  உணவோடு புலாலு ணவும் பெரிதும் விரும்பியுண்ணப்பட்டது.
        மறைக்காப்பாளர்கள் இராச அன்னம் என்னும் உயர் வகை நெல்லரிசியினை உணவாக்கி உண்டனர்.சேதாவின் நறுமோர் அவர்களுக்கு மிகவும் பிடிக்குமாம்.அக்காலத்தில்  பன்றியிறைச்சியை விரும்பி உண்டனர்.வேடுவர்கள்  பன்றி வேட்டயாடுவடு பற்றி இந்நூலே பேசுகிறது.ஈயலைக்கூட உணவாகக் கொண்டனர்.மன்னர்கள் பாணர்க்கும் புலவருக்கும் அளித்த பெரு விருந்துகளில் ஊன் சோறே  பரிமாறப்பட்டது.ஓரிடத்தேனும் புலாலுணவு பழிக்கப்படவில்லை.புலவர்கள் அதனைப் பெரிதும் பாராட்டியே பாடியுள்ளனர்.
           தமிழர்களின் பிரதான உணவு நெல் சோறு அதாவது அரிசிச் சோறு. சோற்றுக்கான அரிசி முல்லைப் பூப் போல வெண்மையாகவும்,மென்மையாகவும் இருக்கும்.ஓர் அரிசியிலேனும் இடைவரிகளோ முரிவோ காணப்படாது.சோறு ஒன்றோன்று இழையாமல் பதமாக வெந்திருக்கும் என்று இலக்கியங்கள் இயம்புகின்றன.அபிதான சிந்தாமணி என்னும் நூல் பின்வருமாறு அரிசி வகைளைப்  பட்டியிலிடுகிறது.
          ஈர்க்குச்சம்பா,புழுகுசம்பா,கைவரைச்சம்பா,செஞ்சம்பா,மல்லிகைச்சம்பா,குண்டு
சம்பா,இலுப்பைப்பூச்சம்பா,மணிச்சம்பா,வளைதடிச்சம்பா,கோரைச்சம்பா,குறுஞ்சம்பா,மிளகுசம்பா,சீரகச்சம்பா,காளான்சம்பா,மைச்சம்பா,கோடைச்சம்பா,காடைச்சம்பா,குன்றுமணிச்சம்பா,அன்னமழகி அரிசி,கார் அரிசி,மணக்கத்தைஅரிசிவாலான்,கருங்குருவை,சவ்வரிசி
மூங்கிலரிசி,கோதுமையரிசி,கம்பரிசி,தினையரிசி,சோள அரிசி,வரகரசி,கேழ்வரகரசி இவையின்றி கேடிலிச்சம்பா,கலிகஞ்சம்பா,கனகம்சம்பா,கலப்புச்சம்பா,கம்பஞ்சம்பா, காடைக்கழுத்தன்  சம்பா,கோடன் சம்பா,பாசடைச்சம்பா,சன்னசம்பா,சின்னசம்பா, சிறுமணிச் சம்பா,சுரைக்காய்ச்சம்பா,சுகுதாச்சம்பா,செம்பாளைச் சம்பா, சொரியஞ்சம்பா,திருவரங்கச்சம்பா,துய்யமல்லிகைச்சம்பா,பாலாஞ்சம்பா, பெருஞ்சம்பா ,
பேய்வள்ளைச்சம்பா,பைகோச்சம்பா,மங்கஞ்சம்பா,மணல்வாரிச்சம்பா,மலைகுலிக்கிச்சம்பா,மாவம்பைச்சம்பா,முனைவெள்ளைச்சம்பா,கார்த்திகைக்கார்,முட்டைகார்,சித்திரைகார்,கருமோசனம்,வெள்ளைமோசனம்,வால்மோசனம்,பொச்சாரி,அருஞ்சோதி,இரங்கமாட்டான்,ஈசுரக்கோவை,பிச்சவாரி,செம்பாளை,கல்லுண்டையரிசி,புட்டரிசி,குளிப்பியரிசி, குச்சலாடியரிசி, கௌரிகுங்வரிசி முதலிய பலவாம். "  (அபிதான சிந்தாமணி-ப-231)

                               இதிலிருந்து பண்டையக் காலத்தில் பல்வேறு அரிசி வகைள் வழக்கத்தில் இருந்ததை அறிந்து கொள்ள முடிகிறது.
          பெரும்பாணாற்றுப்படையில் அரிசிச் சோறு பற்றிய விருந்தோம்பல் பாக்கள் சில காணக்கிடைக்கிறது.  பத்துப்பாட்டினுள் நான்காவதாக இடம் பெற்று இருக்கும் இப்பெரும்பாணாற்றுப்படை தொண்டைமான் இளந்திரையனைச் சிறப்பித்துக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடிய பாட்டு.பேரியாழ் வைத்துள்ள பெரும்பாணன் வழியில் வறுமையால் வாடும் மற்றொரு பாணனையும் ,அவனுடயை சுற்றத்தாரையும் கண்டு அவர்களை திரையினிடம்   ஆற்றுப்படுத்தும் முறையில் இப்பாட்டு அமைந்துள்ளது.திரையுனுடையை விருந்தோம்பல் பற்றியப் பாடல்களிலும்,ஆங்கு வாழும் எயினர்கள்.வலைஞர்கள்,ஆயர்கள் ஆகியோரின் விருந்தோம்பல் பாடல்களிலும் நெல் சோறு பற்றிய செய்திகள் காணப்படுகிறது.

திரையனின் விருந்தோம்பலில் செந்நெல்;
          ஆவி அன்ன அவிர் நூற் கலிங்கம்
         இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குஉடன் உடீஇ,
         கொடுவாள் கதுவிய வடுஆழ் நோன்கை
         வல்லோன் அட்ட பல்ஊன் கொழுங்குறை,
         அரிசெத்து உணங்கிய பெருஞ்செந் நெல்லின்
         தெரிகொள் அரிசித் திரள்நெடும் புழுக்கல்,
         அருங்கடித் தீம்சுவை அமுதொடு பிறவும் (பெரும்-469-475)
 
        பெரும்பாணன், இளந்திரையன் தொண்டைமான் எவ்வாறு விருந்து தருவான் என்பதை ,உன்னுடயை அரையில்கிடக்கும் பாசி படர்ந்த கந்தலாடையை நீக்கி துகில்களைக் கொடுத்து உடுக்கச் செய்வான்.பின்னர் அரிவாள் பிடித்து வடு ஆகிக் கிடந்த வலிய கையை உடைய மடையன் ஆக்கின பல இறைச்சியில் கொழுவிய தசைகளுடன் ,அரிக்குவை ஈரம் வற்றும்படி உலரவிட்ட பெரிய செந்நெல்லினுடைய பொறுக்கரிசியால் அக்கின திரண்ட நெடியசோறும் ,பாதுகாத்து வைக்கப்பட்ட இன்சுவையில் அமிழ்த்தை ஒக்கும் உணவுகளும்  பிறவும் விண்மீன்கள் போன்ற வெள்ளிக்கலங்களில் நிரப்பி ,தாய் தன் பிள்ளையின் முகம் பார்த்து இனிமையாக உபசரிப்பான் என்று மேற்கண்டப் பாடலில் கூறுகிறான்.
  இதனைப் போல் பொருநராற்றுப் படையிலும் ஒரு பாடல்,
           மகிழ்ப்பதம் பல்நாள் கழிப்பி ,ஓருநாள்
          'அவிழ்ப்பதம் கொள்க' என்றுஇரப்ப,முகிழ்த்தகை
         முரவை போகிய முரியா அரிசி
         விரல்என நிமிர்ந்த நிரல்அமை புழுக்கல்,
         பரல்வறைக் கருணை,காடியின் மிதப்ப
         அயின்ற காலை ,பயின்றுஇனிது இருந்து,(பொருநர்-110-1150)

இதிலிருந்தும் அக்கால அரசர்கள் விருந்தோம்பும்போது ,முல்லை முகைப் போன்ற வரியற்ற இடைமுரியாத அரிசியால்,விரல் போன்று நெடுகின அளவொத்த சோற்றைப் பரிமாறினர் என்பது தெரிய வருகிறது.
எயிற்றியர் அளித்த உணவு:
     குடிசை வாழ் எயினர்கள் எறும்புப் புற்றைப் பாரையாற் குத்தி கிளறி ஆண்டு எறும்பு சேர்த்து வைத்த புல்லரிசியை வாரிக் கொண்டு வந்து உண்ணல் எயிற்றியர் வழக்கம்.புல்லரிசி கிடைத்தவுடன் அவர்கள் முகம் மகிழ்ச்சியால் மலர்வதை வெண்பல் எயிற்றியர் என்று கூறுவார் கடியலூர் உருத்திரகண்ணனார்.
  விளா மரத்தடியில் மான்கள் கட்டப்பட்டிருக்கும் முற்றத்தில் நிலத்தடியில் புதைக்கப்பட்ட குழிந்த உரலில் ,எயிற்றியர் தாம் கொண்ர்ந்த புல்லரிசியைக் கொட்டி  உலக்கையால் குற்றி எடுத்து ஆழ்ந்த கிணற்றில் அமைந்த ஊற்றைத் தோண்டி உவரி நீர் கொணர்ந்து பழைய விளிம்பு உடைந்து போன பானைகளில்  வார்த்து ,உலையை முறிந்த அடுப்பில் ஏற்றி ,சோறு சமைக்கின்றனர் .சமைத்த புல்லரிசிச் சோற்றை கருவாட்டோடு  சேர்த்து தேக்கிலையில் வைத்து தருவர் என்று பின்வரும் பாடல் சுட்டுகிறது..
      பார்வை யாத்த பறைதாள் விளவின்
      நீழல் முன்றில் ,நிலௌரல் பெய்து,
      குறுங்காழ் உலக்கை ஓச்சி ,நெடுங்கிணறு
      வல்ஊற்று உவரி தோண்டி,தொல்லை
      முரவுவாய்க் குழிசி முரிஅடுப்பு ஏற்றி
      வாராது அட்ட ,வாடூஉன்,புழுக்கல் (பெரும்;95-100)
  அதுமட்டுமல்லாது களர் நிலத்தில்  வளரும் ஈச்சம்பழம் போன்ற மேட்டு நிலத்தில் விளைந்த சோற்றினை நாய் வேட்டையாடிக் கொணர்ந்த உடும்புக் கறியோடு  உண்டனர்.அரண்மனைகளில் வாழும் எயினர்கள் மேட்டு நிலத்தில் விளைந்த நெல்லையும் உடும்புக் கறியினையும்  வைத்து விருந்திட்டதை,
   சுவல்விளை நெல்லின் செவ்அவிழ்ச் சொன்றி
   குமலி தந்த மனவுச்சூழ் உடும்பின்
   வறைகால் யாத்தது ,வயன் தொறும் பெறுகுவீர் (பெரும்;131-133)
என்பதால் அறியாலாம்.
வலைஞர்  குடியில்   பெரும்  உணவு:
     குற்றாத கொழியல் அரிசி என்பது தவிடு நீக்கப் பெறாத சத்து நிறைந்த அரிசி.அதனைக் களியாகத் துழாவி அட்ட கூழைப் பெரிய பிழாவில் விட்டு ஆற்றி ,அதனுடன் நெல்முளையை(இன்று முளைவிட்ட தானிய வகைகளைப் பயன்படுத்துவது போல)இடித்து அதனுடன் சேர்த்து,அப்படியே இரண்டு நாட்கள் இரவும் பகலும் ,சாடியில் ஊற்றி வைத்து, விரலாலே அலைத்துப் பிழியப்பட்ட கள்ளை, நெய்யரி எனப்படும் சல்லடையில் வடிகட்டிப் பயன்படுத்துவர் என்பதை,
     வெந்நீர் ,அரியல் விரல்அலை, நறும்பிழி,
     தண் மீன் குட்டொடு, தளிதலும் பெறுகுவீர்,(பெரும்;281-282)
இப்பாடலில் அறிந்து கொள்ள முடிகிறது.

       இங்ஙனமே உழவர்கள் பூளைப்பூப் போன்ற வரகுச் சோற்றை அவரைப் புழுக்கோடு உண்டனர்.
       நெடுங்குரல் பூளைப் பூவி னன்ன
       குறுந்தாள் வரகின் குறளவிழ்ச் சொன்றிப்
       புகறிணர் வேங்கை வீகண் டன்ன
      அவரை வான்புழுக் கட்டிப் பயில்வுற்
      றின்சுவை மூரல் பெறூகுவீர்  -பெரும்-(192-196)
 
ஆயர்கள் குடியில் பெரும்  உணவு;
     ஆயர்கள் தன் சுற்றத்தார் யாவரையும் உள்ளம் மகிழுமாறு பேணுவர்.நண்டின் பார்ப்பை ஒத்த தினை அரிசிச் சோற்றினைப் பாலுடன் பரிமாறுவர் என்பதனை,
             இருங்கிளை ஞெண்டின் சிறுபார்ப்பு அன்ன
              பசுந்தினை மூறல் பாலொடும் பெறுகுவிர் (பெரும்;167-168)
இதனை சிலப்பதிகாரமும் ஆயர் வீட்டில் வேளைப் பூவினைத் தயிரில் இட்டுச் சமைத்த குழம்பும்,ஈசலைத் தயிரில் இட்டுச் சமைத்த குழம்பும் பால் சோறும் கிடைக்கும் என்று கூறுகிறது.
                 இவ்வாறு உணவில் நெல் சோறு அதிகமாக பயன்பாட்டில் உள்ளது என்பதை இவ்விலக்கியம் பதிவு செய்கின்றன.பழைமை கழிந்து புதியவை வந்தாலும் அன்று முதல் இன்று வரை தமிழரின் உணவில் நெல் சோறு முக்கிய இடத்தை பெறுகிறது என்பதில் மாற்றம் இல்லை.உண்டி கொடுத்தாரே உயிர் கொடுத்தார் என்கிறது புறம்.சோழ நாடு சோறுடைத்து என்பதற்கிணங்க  தமிழர் இலக்கியமும் இதனையே இயம்புகிறது.

     

     
   



         

Sunday, 9 July 2017

பதிற்றுப்பத்துக் கூறும் சேரப் படையெடுப்பில் ஊர்ப்பெயர்கள்

                   மூவேந்தர்களில் முதலிடம் வகிக்கும் சேரர்கள் ஆண்ட தென் பகுதி அதாவது தற்பொழுது கேரளா என்று அழைக்கப்படும் பகுதியாகும். (சேர-கேர-கேரளா)தமிழ் மொழியினைத் தாய்மொழியாகவும்,அரசவை மொழியாகவும் வழங்கி வந்த  அவர்கள் காலப்போக்கில் மொழிவளர்ச்சியின் காரணமாக கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டிற்குப் பிறகே மலையாளம் என்ற தனி மொழியினை வழக்கிற்கு கொண்டுவந்தனர்.சேர நாட்டு  செந்தமிழ் இல்லக்கியங்களில் பதிற்றுப்பத்து  சேர அரசர்களின் வரலற்றினைத் தெளிவுற விளக்கும் ஓர் இலக்கியப் பெட்டகம் ஆகும். பதிற்றுப்பத்து வழி அறியலாகும் சேர படையெப்பில்  காணப்படும் சில ஊர்ப்பெயர்களை ஆய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

சேரநாட்டின் எல்லை:   
           சேரநாட்டின் எல்லையினைப் பழந்தமிழ்ப் பாட்டொன்று பின்வருமாறு குறிக்கப்படுகிறது,
     "வடக்குத் திசைபூமி வான்கீழ்தென் காசி
      குடக்குத் திசை கோழிக் கோடாம் - கடற்கரையின்
      ஓரமே தெற்காகும் உள்ளெண் பதின்காதம்
      சேரநாட் டெல்லையெனச் செப்பு."
முசிறி;
      சேர மன்னர்களின் நாடும் ஊரும் வடமொழிகளில் குறிப்பிடும் அளவிற்கு அவ்வேந்தர்களின் புகழ் மேலோங்கி இருந்தது.வடமொழியில் ஆதிகாவியம் எனப்படும் வான்மீகி இராமயணத்தில் ,சீதா தேவியை வானரவீரர் தேடி வரும்படி சுக்ரீவன் குறிப்பிட்டுள்ள இடங்களுள் கேரள நாடும் ,முரசீபத்தனமும் (முசிறி) குறிப்பிடப்படுகிறது.
முரசீபத்தினம் என்பது சேர அரசர்களின் தலைநகரங்களில் ஒன்றான முசிறியாகும்.முசிறி துறைமுகம் மேனாட்டு யவனரது மரக்கலங்களில் மிளகு முதலிய மலைநாட்டுப் பொருட்களை ஏற்றிச் செல்வதற்க்கு சிறந்த துறைமுகமாக விளங்கியது என்பதை பின்வரும் அகநானுற்றுப் பாடல் தெரிவிக்கின்றது.
       "வாரேன்வாழி ,என் நெஞ்சே ! சேரலர்
        சுள்ளிஅம் பேரியாற்று வெண்நுரை கலங்க
        யவனர் தந்த வினைமாண் நன்கலம்
        பொன்னொடு வந்து கற்யடு பெயரும் 
        வளம்கெழு முசிறி ஆர்ப்புஎழ வளைஇ"          (அகம்-149-(7-11)
என்று முசிறி நகரினை எர்க்காட்டூர்த் தாயங்கண்ணனார் பாடுகிறார்.

தொண்டி   
   சேர மன்னர்களின் துறைமுகமாக இருந்துள்ள தொண்டி என்னும் ஊரை மையமாகக் கொண்டு அம்மூவனாரால் இயற்றப்பட்டது தொண்டிப் பத்தாகும்.தொண்டிப்பத்தில் முதற்பாடல் ,என் நெஞ்சத்தை முழுமையாகக் கவர்ந்துகொண்ட இவள் ,கடலலையின் இனிய இசையடு கூடி ,அயலே உள்ள ஒவ்வொரு  தெருக்கண்ணும்  மத்தளத்தின்இனிய இசை முழங்குவதற்கு இடமான தொண்டி என்ற பட்டினம் போன்ற பருத்த தோள்களையும் ஒளிமிக்க வளையல்களையும் உடையவள் தலைவி என்று இயம்புகிறது.இவ்வாறே பத்துப் பாடல்களும் தொண்டியின் சிறப்பை இயம்புகின்றன.
  " மறாஅ  விளையுள் அறாஅ யாணர்"        (ஆறாம்பத்து ;10-8)
தொண்டி என்னும் கடற்கரைப் பட்டினத்தைத் தலைநகராகக் கொண்டு ஆடுகோட்டுச் சேரலாதன் என்னும் சேர அரசன் ஆண்டு வந்தான் என்பதை இப்பாடல் மூலம் அறியலாம்.
அகப்பா      
          இப்போது ஆனைமலைத்தொடர் என வழங்கும் தென்மலைப் பகுதியில் முதியர் என்பார் வாழ்ந்து வந்தனர்.குட்ட நாட்டின் வடபகுதிக்கு நேர் கிழக்கில் வடமொழித் தொடரின் மீது இருந்த பாயல் நாட்டுக்குக் குறுநிலத் தலைவர் சிலர் அவ்வப்போது குட்ட நாடு புகுந்து தொல்லை கொடுத்தனர்.உம்பற்காட்டின் வடபகுதியில் அமைந்திருந்த அகப்பா என்னும் அரண் இவர்களுக்குத் தலைமையிடமாக இருந்தது.
இவ்வரண் உயரிய மதிலும் பெரிய காவற்காடும் கொண்டு பாதுகாப்பாக அமைந்திருந்தது.இவர்களை அடக்கப் பல்யானைச்  செல்கெழு குட்டுவன் யானைப் படை நடத்திச் சென்று அவர்களை வென்று அவர்கள் பணிந்து திரைதரத் தன்னாடு திரும்பினான்.
    உம்பற்காட்டு வெற்றியுடன் இல்லாமல் ,குட்டுவன் மேலும் படை நடத்திச் சென்று அகப்பா என்னும் அரணைக் கைப்பற்றி,அதனைச் சுற்றியுள்ள ஊர்களைத் தீக்கிரையாக்கிப் பின்னர் அப்பகுதியினை முதியர் காவலின் கீழ் வைத்து அரச ஆணையினை அப்பகுதியிலும் நிறுவிவிட்டுத் தன் தலைநகர் திரும்பினார்.அச்செய்தி மூன்றாம் பத்தில்,
        "உம்பிற் காட்டைத் தன்கோல் நிறீஇ
         அகப்பா எறிந்து பகற்றீ  வேட்டு
         மதியுறழ் மரபின் முதியரைத் தழீஇக்
         கண்ணகன் வைப்பின் மண்வகுத்து ஈத்து   (2;21-27)        என்று காணப்படுகிறது.

தகடூர்   
         கொங்கு நாட்டின் ஒரு பகுதியாக விளங்கியது அதியமான் எழினியின் நாடாகும்.தற்காலம் தருமபுரி என வழங்கப்படும் நகரமே அந்நாளில் தகடூர் என வழங்கப்பட்டது.முன்பு அதியமான் கோட்டை என வழங்கப்பட்ட இடமே இன்று அதமன் கோட்டை என வழங்கப்படுகிறது.தகடூர் எறிந்த பெருந்சேரல் இரும்பொறை இந்தத் தகடூரைக்  கைப்பற்றி  அதியமானை வென்றான். இச்செய்தியினை,
        "வெல்போர் ஆடவர் மறம் புரிந்து காக்கும்
         வில்பயில் இறும்பிற் றகடூர் நூறி"       (எட்டாம் பத்து -8;8-9) 
என்ற பதிற்றுப்பத்தின் மூலம் அறியமுடிகிறது.
          தகடூர்ப் போர் குறித்துத் 'தகடூர் யாத்திரை' என்றொரு நூல் இயற்றப்பட்டது என்பதை தொல்காப்பிய புறத்திணை உரையில் நச்சினார்க்கினியர் மேற்கோள் மூலம் அறியலாம்.இப்போரில் எழினி இறந்தான் என்றும் ,தகடூர்க் கோட்டை தீக்கிரையாயிற்று.
தகடூர் வெற்றியின் காரணமாக தகடூர் எறிந்த என்னும் அடைமொழியினை பெருஞ்சேரல் இரும்பொறைக்கு உண்டாயிற்று. அஞ்சிக்கு உதவியாகச் சோழனும்,பாண்டியனும் பங்கேற்றனர்.தோல்வியுற்றனர்.
இதனை,
          "பல்வேற் றானை யதிக மானோடு
           இருபெரு வேந்தரயும் உடனிலை வென்று
           முரசுங் குடையுங் கலனுங் கொண்டு
           உரைசால் சிறப்பின் அடுகளம் வேட்டுத்
           துகள்தீர் மகளிர் இரங்கத் துப்பறுத்துத்
           தகடூர் எறிந்து நொச்சிதந் தெய்திய
           அருந்திறல் ஒள்ளிசைப் பெருஞ்சேரல் இரும்பொறை 
என்று எட்டாம் பத்தின் பதிகம் குறிப்பிடுகின்றது. 

மோகூர்
     சேரன் செங்குட்டுவன் செய்த போர்களில் சிறப்பானதொரு போர் அவன் மேற்கொண்ட மோகூர்ப் போராகும்.மோகூர் பாண்டி நாட்டில் மதுரைக்கு அண்மையில் இருந்தது.பிற்காலத்தில் வைணவத் திருப்பதியாக விளங்கிய திருமோகூரே இம்மோகூர் என்பர்.(மயிலை.சீனி.வேங்கடசாமி,சேரன் செங்குட்டுவன்,ப-31)
       மோகூர் மன்னன் பாண்டியனுக்குத் படைத் தலைவனாக இருந்தான். மோகூர் மன்னனுக்கும் அறுகை என்னும் குறுநில மன்னனுக்கும் பகை இருந்தது.ஒரு கால் ,போரில் அறுகை மன்னனை மோகூர் மன்னன் வென்றான்.தோற்ற அறுகைக்கு நண்பனாக இருந்த செங்குட்டுவன் அறுகையின் சார்பில் மோகூர் மேல் படையெடுத்துச் சென்றான். மோகூர்ப் பழையன் அப்போரில் முற்றிலும் தோற்றான்.அவன் காவல்மரமாகிய வேப்பமரத்தை வெட்டி அதனால் முரசு செய்து தன் நாடு திரும்பினான். இவ்வெற்றி  பலராலும் பலவிடங்களிலும் சிறப்பாகப் பேசப்பட்டுள்ளது.
    "நுண்கொடி யுளிஞை வெல்போர் அறுகை
    சேணன் ஆயினும் கேளென மொழிந்து
    புலம்பெயர்ந் தொளித்த களையப் பூசற்று
    அரண் கடாவுறீஇ யணங்குநிகழ்ந் தன்ன
மோகூர் மன்னன் முரசங் கொண்டு
நெடுமொழி பணித்தவன் வேம்புமுதல் தடிந்து
முரசுசெய முரற்சிக் களிறுபல பூட்டி
ஒழுகை யுய்த்தோய் கொழுவில் பைந்துணி"     (ஐந்தாம் பத்து4;10-17)


 என்றும்,
"வெல்போர் வேந்தரும் வேளிரும் ஒன்றுமொழிந்து
மொய்வளம் செருக்கி மொசிந்துவரு மோகூர்
வலம்படு குழூஉநிலை அதிரமண்டி
படுபிணம் பிறங்கப் பாழ்பல செய்து
படுகண் முரசும் நடுவட் சிலைப்ப
வளனற நிகழ்ந்து வாழுநர் பலர்படக்
கருஞ்சினை விறல்வேம் பறுத்த 
பெருஞ்சினக் குட்டுவன்"  (ஐந்தாம் பத்து-9;7-17)
என்றும் பரணர் குறிப்பிடுகின்றார்.

வஞ்சி(கருவூர்)
      மலையாள மாவட்டத்தில் பொன்னானி,பாலைக்காடு,வைநாடு,வள்ளுவ நாடு,குறும்பர் நாடு,கோழிக்கோடு,ஏர்நாடு முதலிய மாவட்டங்களைத் தன்னகத்தே கொண்டது பொறைநாடு.இப்பொறை நாட்டில் குறும்பர் நாடு என்பது ஒரு பகுதியாகும்.இப்பகுதியில் மாந்தரம் எனப் பெரிய மலையன்றும்,அதனையடுத்து மாந்தரம் என்னும் மூதூரும்   உண்டு.இவ்வூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட வேந்தர்கள் மாந்தரன் என்றும் ,மாந்தரம் பொறையன் என்றும்,மாந்தரம் சேரல் இரும்பொறை என்றும் வழங்கப்பட்டனர்.
          மாந்தரஞ் சேரகளுள் மிக்க பழையோனாகப் பழம்பாடல்களில் காணப்படுபவன் மாந்தரம் பொறையன் கடுங்கோ என்பவனாவன்.இவனையடுத்து,ஒள்வாள் கோப்பெருஞ் சேரல் இரும்பொறை என்பான் சேரநாட்டைப் புரந்திருத்தல் வேண்டும்.இவனே 'கொங்கு நாட்டில் வடக்கே பூவானியாறு வரையும்,கிழக்கே கொங்குவஞ்சி (தாராபுரம்)வரையும்,பரவியிருந்த பொறைநாட்டைக் கீழ்க்கொங்கு நாட்டுக் கருவூர் வரையில் பரப்பிய முதல் சேரமான் (ஒளவை.சு.துரைசாமிப்பிள்ளை,பண்டைநாளைச் சேர மன்னர் வரலாறு,ப-185)என்றும்,காவிரிக்கு வடகரையில் உள்ள மழ நாட்டைச் சோழர் கைப்பற்றி ,இக்கோப்பெருஞ்சேரல் அவரோடு ஒள்ளிய வாட்பொர் செய்து கீழ்க் கொங்குநாட்டையும் அதற்கு நேரே காவிரியின்  வடகரையில் கொல்லிமலை வரையில் இருந்த மழநாட்டையும் வெற்றி கொண்டான் என்றும் ,பின்னர்ச் சோழரொடு உறவுகொண்டு கருவூர்க்கு அணித்தே 
ஓடும் ஆன்பொருநை ஆற்றின் கரையிலிருந்த ஊரின் பழம்பெயரை கருவூர் என்று மாற்றியும் 
அந்நகரின் நேர் வடகரையில் விளங்கிய மழநாட்டுப் போரூரின் பெயரை மாற்றி முசிறி என்று பெயரையும் இட்டனன் என்றும்,அமராவதி என இப்பொழுது வழங்கப்படும் ஆறு ஆன்பொருநை  என்றும் குறிக்கப்படுகின்றன என்றும், சேர நாட்டுப் பெருநகரங்களின் நினைவாகவே காவிரிக் கரையிலும் கருவூரும் முசிறியும் பெயர் பெற்றன என்றும் ஆராய்ச்சி அறிஞர் ஒளவை.சு. துரைசாமிப்பிள்ளை அவர்கள் கூறியுள்ளார்.
     ஓள்வாய் கோப்பெருஞ்சேரல் இரும்பொறையின் மகனே செல்வக் கடுங்கோ வாழியாதான்.இவன் கபிலருக்கு நன்றா என்னும் குன்றேறி  நின்று தன் கண்ணிற்கண்ட நாடெல்லாம் காட்டிக் கொடுத்தான்.இந்நன்றா இன்று நணா என்றூ மருவி பவானி என்று வழங்குகின்றது.இவனுக்கு சிக்கற் பள்ளித் துஞ்சிய செல்வக் கடுங்கோ வாழியாதான் என்ற பெயரை வழங்கினர். சிக்கல் என்ற இடத்தில் பாண்டியனுக்காக துணை சென்று பகைவர் இட்ட வேல் இவன் மார்பில் தைத்து விழுப்புண் உண்டாக்கியது.அதனால் அவனுக்கு இப்பெயர் வந்தது.இப்போது இராமநாதபுரம் மாவட்டம் உத்திர கோச மங்கைப் பகுதியில் அவ்வூர் உள்ளது.
         இளஞ்சேரல் இரும்பொறை ஐந்தெழில் என்னும் கோட்டையை முற்றுகையிற்று ,சோழன்,பாண்டியன், விச்சி,இளம் பழையன் மாறன் என்பவர்களை வென்று ,அவர்களிமிருந்து திறையாகப் பேற்றுவந்த பொருளைக் கொண்டு வஞ்சி மூதூரில் தன்னை நாடிவந்த இரவலர்க்கு இனிதே வழங்கி மகிழ்ந்தான் என்று பின்வரும்  பதிகம் குறிப்பிடப்படுகிறது.
        " வெருவரு தானையடு வெய்துறச் செய்துவென்று
         இருபெரு வேந்தரும்    விச்சியும்     வீடி
        அருமிளைக் கல்லகத்  தைந்தெயி  லெறிந்து
        பொத்தி யாண்ட பெருஞ் சோ ழனையும்
        வித்தை யாண்டவிளம் பழையன் மாறனையும்
      வைத்த அஞ்சினம் வாய்ப்ப வென்று
      வஞ்சி மூதூர்த் தந்துபிறர்க் குதவி"       (ஒன்பதாம் பத்து-3-9)
           இவ்வாறு  பதிற்றுப்பத்தின் மூலம்  சேரப் படையெடுப்பின் போது இருந்த ஊர்பெயர்களைப் பற்றி அறியமுடிகிறது. இலக்கியங்கள் வரலாற்றைப் பிரதிபலிக்கும் காலக் கண்ணாடி என்பது சான்றோரின் கருத்து.ஆம்.. பண்டைத் தமிழ் இலக்கியங்களின் வாயிலாக வரலாற்றுச் செய்திகளையும் அறிந்து கொள்ளமுடிகிறது. பழையன கழிதலும் ,புதியன புகுதலும் என்ற வாக்கிற்கு ஏற்றாற்ப்போல் பழைய ஊர்ப் பெயர்களில் மாற்றங்கள் வந்திருந்தாலும் இலக்கியம் படிக்கும் நம்மால் பழைமையினை மறக்க இயலாது என்பதே உண்மை.  புதியனவற்றில் பழையனவற்றை நினைவில் நிறுத்துவோம்.
                                                          

  வல்லம் ஏகெளரி அம்மன் - சிறப்புப் பார்வை முனைவர் பிரியாகிருஷ்ணன். பதிவு செய்த நாள் : 25.02.2024 அமைவிடம்: தஞ்சைக்கருகில் வல்லம் என்ற ஊரில...